Published : 28 Aug 2019 10:03 AM
Last Updated : 28 Aug 2019 10:03 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; பெடரரிடம் வீழ்ந்தார் சுமித் நாகல்: குணேஸ்வரனும் முதல் சுற்றுடன் வெளியேற்றம்

நியூயார்க் 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொட ரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர ரிடம் சற்று போராடி வீழ்ந்தார் இந்தியாவின் சுமித் நகால்.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரும், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தரவரிசையில் 190-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமில் நாகலை எதிர்த்து விளையாடினார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதன் முறையாக அறிமுகமான 22 வயதான சுமித் நாகல் முதல் செட்டை 6-4 என கைப்பற்றி பெட ரருக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனி னும் அடுத்த இரு செட்களையும் பெடரர் 6-2, 6-1 என எளிதாக கைப்பற்றினார். 4-வது செட் மிக நெருக்கமாக அமைந்த நிலையில் சுமித் நாகல் சற்று போராடினார். ஆனால் பெடரர் அதை சாதுர்யமாக எதிர்கொண்டு 6-4 என அந்த செட்டை கைப்பற்றினார்.

முடிவில் சுமார் 2 மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெடரர் 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றுடன் சுமித் நாகல் வெளியேறிய போதும் அவரது போராட்ட குணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் பெடரரின் சர்வீஸை இருமுறை சுமித் நாகல் முறியடித்தது சற்று அதிசயிக்க வைத்தது. மேலும் தனது துடிப்பான ஆட்டத்தால் பெடரரை 19 முறை தவறுகள் செய்யத் தூண்டவும் செய்தார் சுமித் நாகல்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் கடந்த 20 வருடங்களில் ஒரு செட்டை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுமித் நாகல். இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் சோம்தேவ் வர்மன், யுகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஆகியோர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் பிரதான சுற்றில் ஒரு செட்டை கைப்பற்றியிருந்தனர்.

சுமித் நாகல் தகுதி சுற்றின் வாயிலாக பிரதான சுற்றில் காலடி எடுத்து வைத்திருந்தார். சுமித் நாகல் சுமார் ரூ.41.50 லட்சத்துடன் (முதல் சுற்று பங்கேற்பு தொகை) வெளியேறினாலும் அவருக்கு அதனினும் பெரிய அனுபவம் கிடைக்கப் பெற்றுள்ளது.

போட்டி முடிவடைந்ததும் பெடரர் கூறுகையில், “முதல் செட் கடினமாக அமைந்தது. சுமித் நாகல் மிகவும் வலுவாக விளையாடினார். இதற்காக அவரை பாராட்ட வேண்டும். அதிக அளவிலான பந்துகளை தவறவிட்டேன். அதனால் தேவையில்லாத பிழைகளை குறைக்க முயற்சி செய்தேன். ஆட்டத்தில் என்ன கொண்டு வர முடியும் என்பது சுமித் நாகலுக்கு தெரியும். அவர் மிகவும் உறுதியான டென்னிஸ் வாழ்க்கையைப் பெறுவார் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், நிச்சயமாக இது மிகப்பெரிய ஆச்சரியங்களுடன் வெளிவரும் விளையாட்டு அல்ல. இது மிகவும் சீரானது.

அவர் அதை எனக்கு எதிரான ஆட்டத்தில் மிகச் சிறப்பாக செய்தார் என்று நினைக்கிறேன். சிறந்த ஆட்டத்தை விளையாடுவது ஒருபோதும் எளிதானதல்ல. சுமித் நாகலின் ஆட்டம் மிகவும் சீரானதாக இருப்பதை அடிப்படையாக கொண்டது என்றே கருதுகிறேன். நன்றாக நகர்கிறார், பந்துகளை சிறப்பாக நகர்த்துகிறார்” என்றார்.

தரவரிசையில் 88-வது இடத்தில் உள்ள மற்றொரு இந்திய வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேனியல் மேத்வதேவ் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக பிரஜ்னேஷ் குணேஸ்வரனை வென்றார். முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ராபர்டோ கார்பல்ஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கெர்பர் தோல்வி

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 14-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 5-7, 6-0, 4-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டினா மெடனோவிச்சிடம் தோல்வியடைந்தார். 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை எளிதாக வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார்.

ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்தி, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகி யோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x