Published : 27 Aug 2019 03:39 PM
Last Updated : 27 Aug 2019 03:39 PM

யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: ஷரபோவாவை முதல் சுற்றிலேயே 59 நிமிடங்களில் வெளியேற்றிய செரீனா

நியூயார்க்,

நியூயார்க்கில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவாவை முதல் சுற்றிலேயே வெளியேற்றினார் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் நேற்று நடந்தது.

இதில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவை எதிர்கொண்டார் அமெரிக்காவின் நம்பர் ஒன் வீராங்கனையும், தரவரிசையில் 8-ம் இடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ்.

59 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் மரியா ஷரபோவாவை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாகத் தோற்கடித்து முதல் சுற்றிலேயே வெளியேற்றினார் செரீனா வில்லியம்ஸ்.

அதிக ஆவேசத்துடனும், உத்வேகத்துடனும் ஆட்டத்தை செரீனா வில்லியம்ஸ் தொடங்கினார். செரீனாவின் ஒவ்வொரு சர்வீஸ்களும் ஷரபோவாவை திணறடித்தன. செரீனா வில்லிஸின் அசுரத்தனமான ஏஸ்களுக்கு முன் ஷரபோவா வீழ்ந்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். ஒவ்வொரு ஏஸ்களும் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பறந்தன, பல சர்வீஸ்களை ஷரபோவாவால் தொடக்கூட முடியாமல் எளிதாக புள்ளிகளைப் பெற்றார் செரீனா.

ஆனால், ஷரபோவா வீசிய பல சர்வீஸ்களை எளிதாக பிரேக் செய்தார் செரீனா. இதனால் ஷரபோவாவால் ஒவ்வொரு செட்டிலும் ஒரு கேமுக்கு மேல் கைப்பற்றுவதே கடினமாக இருந்தது. ஷரபோவா தனது சர்வீஸ்களில் 20 தவறுகளைச் செய்தார். இந்த தவறுகளால் முதல் செட்டில் ஒரு கேமும், 2-வது செட்டில் ஒரு கேமும் மட்டுமே ஷரபோவா கைப்பற்ற முடிந்தது.

இது ஷரபோவாவுக்கு எதிராக செரீனா தொடர்ந்து பெறும் 19-வது வெற்றியாகும். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் 24-வது பட்டத்தை வெல்ல முனைப்புடன் தீவிரமாக இருக்கிறார்.

இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை மார்ட்க்ரெட் கோர்ட் மட்டுமே வென்றுள்ளார். அவரின் சாதனையை ஈடு செய்ய செரீனா முயன்றும் அது கடந்த சில ஆண்டுகளாகவே பலிக்காமல் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

2-வது சுற்றில் அமெரிக்கா வீராங்கனையும், வைல்டு கார்டு மூலம் விளையாட வந்துள்ள கேட்டி மெக்நாலேயுடன் செரீனா மோதவுள்ளார். அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் செரினா முன் வைல்டு கார்டு வீராங்கனை தாக்குப்பிடிப்பது கடினமே.

வெற்றி குறித்து செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், " ஷரபோவா சிறந்த வீராங்கனை. இவருடன் விளையாடும் போது, சிறந்த பயிற்சியுடன்தான் வர வேண்டும். அந்த வகையில் நான் சிறப்பாகவே தயாராகி இருக்கிறேன். நான் எப்போது விளையாட வந்தாலும் சிறந்த டென்னிஸைத்தான் வெளிப்படுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x