உலக நீச்சல் போட்டியில் தமிழக இளைஞர் சாதனை

உலக நீச்சல் போட்டியில் தமிழக இளைஞர் சாதனை
Updated on
2 min read

ம.சுசித்ரா

18-வது ஃபினா நீர் விளையாட்டு உலக சாம்பியன் ஷிப் போட்டி தென்கொரியாவின் குவாங்ஜு நகரத்தில் கடந்த 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றன. 84 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் நயினார் 25-29 வயதினருக்கான 50 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவு நீச்சல் போட்டியில் பந்தய தூரத்தை 25.69 விநாடிகளில் கடந்து 5-வது இடத்தையும், 100 மீட்டர் பட்டர் ஃப்ளை பிரிவில் பந்தய தூரத்தை 58.72 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்து இந்திய நீச்சல் கூட்டமைப்புக்கும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

ஃபினா நீர் விளையாட்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நீச்சல் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத் திருக்கும் முதல் வெற்றி இதுவே. நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட அரவிந்த் நயினார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

பொதுச் சரக்கு மற்றும் சேவை வரி, மத்தியக் கலால் வரித் துறையில் வரி உதவியாளராகத் தற்போது பணியாற்றிவருகிறார். அரவிந்த் நயினார் கூறுகையில், “எனது தந்தை நயினார் ஆசாரி சிறந்த நீச்சல் வீரராகவும் தமிழ்நாடு மாநில நீர் விளையாட்டு சங்கத்தின் முன்னாள் செயல ராகவும் திகழ்ந்தவர். நீச்சல்தான் அப்பாவோட வாழ்க்கையாக இருந்ததால 5 வயதிலேயே நான் இயல்பாக நீச்சல் பழக ஆரம்பிச்சிட்டேன்.

மற்ற விளையாட்டுகளைப் போன்றே நீச் சலுக்கும் நுட்பங்கள், தந்திரங்கள் இருக்கின்றன. அதிலும் பேச்சாளர்களுக்கு ஸ்டேஜ் ஃபியர் (மேடை பயம்) ஏற்படுவது போலவே நீச்சல் வீரர்களுக் கும் சகப் போட்டியாளர்களைக் கண்டதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். இதனால் பயிற்சியின் போது வெளிப்படுத்திய ஆற்றலை போட்டி நேரத் தில் வெளிப்படுத்த முடியாமல் பின்னடைவு அடையக்கூடும். இதைத் திறம்படக் கையாள உடல்ரீதியான பயிற்சிகள் மட்டுமின்றி மனரீதி யான பயிற்றுவிப்பும் அவசியம்.

இதுபோன்ற நுட்பங்களை Fluid Mechanics என்ற படிப்பில் கற்றுக் கொண்டேன். இதுதவிர இலவச நீச்சல் பயிற்றுவிப்பு இணையதளங் கள் மூலமாக பல நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் பிற்பாதியில் வேகம் பிடித்து நீந்தும் நுட்பத்தைப் பின்பற்றுபவர். இதைப் பின்பற்ற உடல் பலத்தைப் போன்றே மனோ பலமும் அதிகம் தேவை. நானும் இதே பாணியைத்தான் பின்பற்று கிறேன். ஃபினா போட்டியில் 90 மீட்டர் வரை நிதானமாக நீந்திவிட்டு கடைசி 10 மீட்டர் தூரத்தை அடைய வேகமாக நீந்தினேன்.

ஆனால் பயண அசதி, புதிய உணவு ஒவ்வாமை ஆகியவற்றால் உடல் சோர்வடைந்திருந்ததால் கடைசி சில விநாடிகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டேன். தொடர் பயிற்சியின் மூலம் உடல், மனம் இரண்டையும் கட்டுக்கோப்பாக வைத்து 2020-ல் பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் பான் அமெரிக்கன் மாஸ்டர்ஸ் கேம்ஸில் நிச்சயம் சாம்பியனாவேன்” என்றார்.

அரவிந்த் நயினார் கடந்த 2008-ல் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பிளஸ் 2 படிக்கும்போது கத்தார் தலைநகர் தோஹாவில் 2009-ல் நடைபெற்ற உலகப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.

கல்லூரி நாட்களில் 2012, 2013 ஆகிய இரண்டாண்டுகள் தொடர்ந்து அனைத்திந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இந்தக் காலகட்டத்தில் 21 பதக்கங்கள் வென்றார்.

தொடர் வெற்றிகளால் 2013-ல் ரஷ்யாவில் நடைபெற்ற உலகப் பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 2014-ல் நியூ ஜெர்சிக்குச் சென்று நீச்சல் குறித்த படிப்பான ‘Fluid Mechanics’ படித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in