Published : 26 Aug 2019 04:00 PM
Last Updated : 26 Aug 2019 04:00 PM

‘டிம் பெய்ன் மூளை மழுங்கிவிட்டது’ - கேப்டன்சி மீது பெருகும் கடும் விமர்சனங்கள்

பால் டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகு அணியை ஒருங்கிணைத்து பெரிய பிளவு ஏற்படமால் காத்ததில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்று புகழாரம் சூட்டப்பட்டாலும் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக ஹெடிங்லே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு அவரது டி.ஆர்.எஸ் முடிவு மற்றும் களவியூகம் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன.

பென் ஸ்டோக்ஸுக்கு ஒரு கட்டத்தில் 8 வீரர்களை பவுண்டரி அருகே நிறுத்தியது பெரும் தவறு என்றும் ஸ்டோக்ஸ் சிங்கிள் எடுத்து ஒரு முனையை தன் ஸ்ட்ரக்கில் தக்க வைக்க அனுமதித்தது எப்படி? என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர்கள் முதல் பண்டிதர்கள் வரை அவரைச் சாடி வருகின்றனர்.

இந்தத் தொடரில் டிம் பெய்ன் 77 ரன்களை 13க்கும் கீழான சராசரியில் எடுத்துள்ளார், ஆஸ்திரேலிய கேப்டன்களிலேயே படுமோசமான பேட்டிங் இவருடையதுதான் என்று அங்கு கடும் கேலி, கிண்டல்கள் எழுந்துள்ளன..

இந்நிலையில் பாட் கமின்ஸ் பந்தில் ஜாக் லீச்சுக்கு லெக் ஸ்டம்புக்கு வெளியே வாங்கினார் என்று தெரிந்தும் ரிவியூ கேட்ட தவறு கடுமையாக அங்கு பார்க்கப்படுகிறது.

சேனல் 9-ல் வர்ணனையிலிருந்த முன்னாள் வீரர்கள் இயன் சாப்பல், இயன் ஹீலி, மார்க் டெய்லர் ஆகியோர் டிம் பெய்ன் கேப்டன்சியைச் சாடி வருகின்றனர்.

இயன் சாப்பல் கூறும்போது, “லீச் கால்காப்பை பந்து தாக்கியது , அது தெளிவாக நாட் அவுட். அதாவது கற்பனை வளத்தை என்னதான் நீட்டித்தாலும் அது நாட் அவுட்தான். ஆஸ்திரேலியர்கள் இதற்க் ரிவியூ கேட்டனர்.

இந்தக் கணம்தான் சூழ்நிலை இவர்களை ஆதிக்கம் செலுத்தி விட்டது. டிம் பெய்ன் மூளை மழுங்கி விட்டது. லெக் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே செல்லும் பந்து என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏன் ரிவுயூ செய்ய வேண்டும்?” என்று சாடினார்.

மார்க் டெய்லர், “ரிவியூக்களை விரயம் செய்தல் கூடாது. ஏனெனில் முக்கியக் கட்டத்தில் இல்லாமல் போய்விட்டதல்லவா?” என்றார்

முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி, “பெய்ன் ஒரு ரிவியூவை முட்டாள்தனமாக இழந்தார். அது எல்.பி. என்று அவுட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் அதில் சந்தேகமேயில்லை. தேவையில்லாமல் ஒரு ரிவியூ செய்தார், அதனால் டெஸ்ட் போட்டியையே இழக்க நேரிட்டது” என்று சாடினார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x