Published : 25 Aug 2019 10:03 PM
Last Updated : 25 Aug 2019 10:03 PM

மகா இன்னிங்ஸை ஆடிய மாவீரன் பென் ஸ்டோக்ஸ்: வரலாற்று சிறப்பு மிக்க சதத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி 135 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 359 ரன்கள் வெற்றி இலக்கை 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் எடுத்து இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஷஸ் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

219 பந்துகளைச் சந்தித்த ஸ்டோக்ஸ் 11 பவுண்டரிகள் 8 டவரிங் சிக்சர்களுடன் 135 ரன்கள் எடுத்து மாவீரனாக நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று இது போற்றப்படும் ஏனெனில் இங்கிலாந்து அதிகம் விரட்டிய இலக்கு இதுவே.

கடைசி விக்கெட்டுக்காக ஜாக் லீச்சை (17 பந்துகள் 1 ரன்) வைத்துக் கொண்டு 10.2 ஓவர்களில் 76 ரன்களை விளாசினார் பென் ஸ்டோக்ஸ் இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணியின் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெற்ற டெஸ்ட் ஆனது இது. இதற்கு முன்பாக 332 ரன்கள்தான் அதிகபட்சமாக இங்கிலாந்து விரட்டியுள்ளது.

அதிசயம் ஆனால் உண்மை ரக இன்னிங்ஸ்:

ஆஸ்திரேலியா தரப்பில் மார்கஸ் ஹாரிஸ் டீப் பேக்வர்ட் பாயிண்டிலிருந்து ஓடி வந்து கீழே விழும் தருணத்தில் பந்தை கேட்ச் ஆக்க முயன்று தோல்வி அடைந்தார். இது பென் ஸ்டோக்ஸுக்கு ஒரு திக் திக் தருணம். 2வது நேதன் லயன் தன் வாழ்நாளில் இந்தத் தவறை மறக்க மாட்டார் என்பதற்கேற்ப கடைசியில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்கலாமா என்று ஸ்டார்ட் கொடுத்து கிரீசுக்குத் திரும்ப ரன்னர் முனையில் ஜாக் லீச் கிட்டத்தட்ட பாதி பிட்சுக்கு வந்து திரும்பி ரன்னர் முனைக்கு வரும் தருணத்தில் வெகு சுலபமான ரன் அவுட்டை நேதன் லயன் த்ரோவை சரியாக வாங்காமல் விட்டது ஆஸ்திரேலிய வெற்றியைப் பறித்தது.

ஸ்டார்க் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் யார்க்கர் கை கொடுத்திருக்கும். ஸ்டார்க் இல்லாததை நிச்சயம் ஆஸ்திரேலியர்கள் உணர்ந்திருப்பார்கள். ஏனெனில் ஜாக் லீச் 17 பந்துகள் ஆடினார் நிச்சயம் ஸ்டார்க் ஒரு நல்ல யார்க்கரை வீசி வீழ்த்தியிருக்க வாய்ப்புள்ளது. கடைசியில் ஜாக் லீச்சுக்கு ஒரு யார்க்கரில் எல்.பி.முறையீடு கேட்டு நடுவர் நாட் அவுட் என்றார், அது லெக் ஸ்டம்ப் யார்க்கர் ஆனால் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச் ஆனது. தேவையில்லாமல் ரிவியூ செய்து இருந்த ரிவியூவையும் இழந்தனர் ஆஸ்திரேலிய அணியினர், இதனால் நேதன் லயன் பந்தில் கடைசியில் ஒரு பெரிய ஸ்வீப் ஆட முயன்று பென் ஸ்டோக்ஸ் பிளம்ப் எல்.பி. ஆன போது நடுவர் படுமோசமாக அதற்கு நாட் அவுட் கொடுக்க, ரிவியூ செய்ய முடியாமல் போனது. பென் ஸ்டோக்ஸுக்கு இது ஒரு பெரிய அதிர்ஷ்டம்.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி பென் ஸ்டோக்ஸ் ஆடிய இன்னிங்ஸ் ஆகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் டாப் 10-ல் இடம்பெறுவதாகும். பிரையன் லாரா ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே போல் தனிமனிதனாக 153 நாட் அவுட் என்று வெற்றி பெறச் செய்த இன்னிங்சுக்கு ஒப்பானது இந்த இன்னிங்ஸ்.

மேலும் கடைசியில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய சில ஷாட்கள் அற்புதத்திலும் அற்புதம், அதுவும் நேதன் லயனை மட்டையை வலது கைக்கு மாற்றிக் கொண்டு அடித்த கவர் திசை சிக்ஸ் உண்மையில் திகைப்பூட்டக்கூடிய ஷாட். கடும் அழுத்தத்தில் இது போன்ற ஸ்ட்ரோக்கை ஆட கடும் தைரியம் வேண்டும். அது பென் ஸ்டோக்சின் மிகப்பெரிய பலம். அதே போல் அடித்த சிக்ஸ்கள் அத்தனையும் அபாரமான சிக்ஸ், ஒவ்வொன்றுமே அதி தைரிய சிக்ஸ்.

பென் ஸ்டோக்ஸின் மகா சிக்சர்கள், பவுண்டரிகள்:

ஸ்டூவர்ட் பிராட் (0), பேட்டின்சன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேற இங்கிலாந்து 286/9 என்று தோல்வி நிலையில் பென் ஸ்டோக்சை மட்டும் நம்பியிருந்தது. பென் ஸ்டோக்ஸ் அப்போது 174 பந்துகளில் 61 ரன்கள் என்று மிகப்பிரமாதமான தடுப்பு உத்தியுடன் பந்துகளைக் கவனமாகக் கடைசி வரை பார்த்து விக்கெட்டை விடாமல் வெற்றி பெறுவதே குறிக்கோள் என்ற ஒரு உறுதியில் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் அதன் பிறகு ஜாக் லீச் கடைசி வீரர் களமிறங்கியவுடன் ஸ்டோக்ஸ் அதிரடி அவதாரம் எடுத்தார். முதலில் நேதன் லயனை லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ். பிறகு ஒரு லாங் ஆஃப் சிக்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ் விளாசியதில் வெற்றி இலக்கு 50 ரன்களுக்குக் கீழ் வந்தது.

சரி ஸ்பின்னரைத்தான் சிக்ஸ் என்றால் கமின்ஸ் வந்தவுடனும் ஸ்டோக்ஸ் நிறுத்தி விடவில்லை, கமின்ஸ் பந்தை டி20 பாணியில் லெக் ஸ்டம்பில் ஒதுங்கிக் கொண்டு பைன் லெக்கில் தூக்கி விட்டார் ஆனால் அது சிக்ஸ் ஆனதுதான் ஆச்சரியம். 90களுக்குள் புகுந்தார் ஸ்டோக்ஸ்.

இந்நிலையில்தான் ஹேசில்வுட்டைக் கொண்டு வந்தார் டிம் பெய்ன், இந்த ஓவர் ஒன்று விக்கெட் இல்லையெனில் அடி என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போதுதான் ஒரு நேர் ஷாட்டை பேக்ஃபுட்டில் அடித்தார் பந்து பவுண்டரியில் கதறியது. அதியற்புத ஷாட். பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார். அடுத்து ஹேசில்வுட்டின் யார்க்கர் முயற்சி தாழ்வான புல்டாஸாக ஸ்டோக்ஸ் அதனை டீப் ஸ்கொயர் லெக்கில் தூக்கினார் சிக்ஸ். அடுத்த பந்தும் லெந்த் பந்தாக மேற்குக்கூரைக்கு பறந்தது. சிக்ஸ். அடுத்து கமின்ஸை 2 பவுண்டரிகள். மீண்டும் நேதன் லயனை ஒரு சிக்ஸ் கடைசியில் வின்னிங் ஷாட் கவர் திசையில் பவுண்டரி. உணர்ச்சிகரத்தின் உச்சக் கட்டத்துக்குச் சென்றார் பென் ஸ்டோக்ஸ்.

முன்னதாக 15/2 என்ற நிலையிலிருந்த இங்கிலாந்தை ஜோ ரூட், ஜோ டென்லி இணைந்து அபாரமான இரு இன்னிங்ஸ்களில் மீட்டு ஸ்கோரை 141 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், டென்லி 50 ரன்களில் ஹேசில்வுட்டிடம் ஆட்டமிழந்தார். 77 ரன்கள் எடுத்த ஜோ ரூட் இன்று காலை 2 ஓவர்கள் சென்றால் புதிய பந்து எடுக்க வேண்டிய நேரத்தில் நேதன் லயனை அடித்து ஆட முயன்று தேவையற்ற விதத்தில் வார்னரின் பிரமாத கேட்சுக்கு வெளியேறினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா கிடுக்கிப் பிடி போட ஜானி பேர்ஸ்டோவும், பென் ஸ்டோக்சும் அதி கவனத்துடன் ஆடி ஸ்கோரை 245 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் ஆஸ்திரேலியர்கள் கடும் நெருக்கடி கொடுக்க அதுவும் ஒரு அப்பீலில் பேர்ஸ்டோவை பதற்றமடையச் செய்து அவரை டென்ஷன் படுத்தினர், இதனால் அவர் ஹேசில்வுட்டின் வெளியே சென்ற பந்தை கட் செய்ய முயன்று கேட்ச் ஆகி ஸ்லிப் கேட்சுக்கு வெளியேறினார்.

ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் இடையே ரன் ஓடுவதில் குழப்பம் ஏற்பட ட்ராவிஸ் ஹெட் நேர் த்ரோவில் பட்லர் 1 ரன்னில் வெளியேறினார், கிறிஸ் வோக்ஸ் (1), ஆர்ச்சர் (15) என்று முடிய 286/9 ஆனது ஆஸ்திரேலியா அதன் பிறகுதான் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம் வெற்றியில் முடிந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லயன் 114 ரன்களுக்கு 2 விக்கெட். பேட்டின்சன் இன்று சரியாக வீசாமல் ஸ்டோக்ஸை செட்டில் ஆகவிட்டார். அதன் பலனை ஆஸ்திரேலியா அனுபவித்தது. நம்பர் 11 வீரர் 17 பந்துகள் ஆடியிருக்கிறார் அவரை வீழ்த்த ஆஸி.யிடம் ஒரு பந்து இல்லை என்பதுதான் அவர்கள் தோல்விக்குக் காரணம்.

முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்குச் சுருண்ட அணி டெஸ்ட் போட்டியை வெல்வது என்பதெல்லாம் கனவில்தான் நடக்கும் ஆனால் பென் ஸ்டோக்ஸ் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றக்கூடியவர் என்பதை முதலில் உலகக்கோப்பை இங்கிலாந்து வெற்றியிலும் தற்போது ஆஷஸ் தொடரிலும் நிரூபித்துள்ளார். ஆட்ட நாயகன் பென்ஸ்டோக்ஸ் கூறும்போது ‘அட்ரினலைன் சுரப்பி என்னை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டேயிருந்தது’ என்றார். இந்த அட்ரினலைனை ஆஸி.யினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர் 1-1 என்று சமன்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x