

பாஸல்
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தங்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நட்சத்திர வீராங்கனைகளான இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் களமிறங்கினர் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.
அதேவேளையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் வீழ்ந்து மீண்டும் ஒரு முறை தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை சிந்து தவறவிட்டிருந்தார். 24 வயதான சிந்து, கடந்த மாதம் இந்தோனேஷிய ஓபனில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய நிலையில் உலக சாம்பியன்ஷிப் தொடரை சந்தித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. உலகின் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிந்து, 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை சந்தித்தார்.
முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-7 என தன் வசப்படுத்தினார்.முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
தவிர இது, உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5-வது பதக்கம் இது ஆகும். தங்கம் வென்ற சிந்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் இனிப்புகள் வழங்கி இந்த வெற்றியை கொண்டாடினர்.