Published : 24 Aug 2019 08:56 PM
Last Updated : 24 Aug 2019 08:56 PM

45 பந்துகள் நின்று பூஜ்ஜியம்; கமின்ஸின் சாதனைப் போராட்டம்: 222 ரன்களுக்கு மே.இ.தீவுகள் ஆல் அவுட்

மே.இ.பவுலர் மிகுவெல் கமின்ஸின் பேட்டிங் ‘டக்’ சாதனை.

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி மே.இ.தீவுகளை 222 ரன்களுக்குச் சுருட்டி 75 ரன்கள் முன்னிலை பெற்றது.

இன்று 189/8 என்று ஆட்டத்தை தொடங்கிய போது மே.இ.தீவுகளின் ஒரே நம்பிக்கை கேப்டன் ஜேசன் ஹோல்டர் மீதுதான் இருந்தது. அவரும் பும்ராவை ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து சுவாரஸியம் கூட்டினார். பிறகு சில ஓவர்கள் கழித்து ஷமியை ஒரு பவுண்டரி அடித்தார் அவ்வளவே கடைசியில் 65 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமியின் 4வது ஸ்டம்ப் லைன் பந்தை தொட்டு பந்த்திடம் எளிதான கேட்சுக்கு வெளியேறினார்.

ஆனால் இதில் சுவாரசியம் என்னவெனில் கிமார் ரோச் நேற்று ஆட்டமிழந்த போது 179/8 என்ற நிலையில் ஹோல்டருடன் சேர்ந்த பவுலர் மிகுவெல் கமின்ஸ் இன்று கடைசி விக்கெட்டாகவே ஆட்டமிழந்தார், ஹோல்டருடன் இணைந்து 9வது விக்கெட்டுக்காக 41 ரன்கள் சேர்க்கப்பட்டதில் இவர் கமின்ஸ் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

ஹோல்டர் ஆட்டமிழந்த பிறகும் அவர் நின்று கொண்டிருந்தார், ஆனால் ரன் எடுக்க முடியவில்லை. 45 பந்துகளை சந்தித்த அவர் கடைசியில் பூஜ்ஜியத்திலேயே இருந்த நிலையில் ஜடேஜா பந்தை ஒரு சுழற்று சுழற்றினார் நேராக பவுல்டு ஆகி வெளியேறினார். மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணிக்கு 75 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

இதில் மிகுவெல் கமின்ஸ் ஒரு சாதனை நிகழ்த்தினார் 45 பந்துகள் டக் என்பது 5வது அதிகப்பந்துகள் விளையாடி டக் அடித்த சாதனையாகும்.

இதற்கு முன்பாக நியூஸிலாந்தின் ஆலட் என்பவர் 1999ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 77 பந்துகள் ஆடி ரன் எடுக்காமல் முடிந்துள்ளார், இவர்தான் நம்பர் 1.

2014-ல் லீட்ஸில் இலங்கைக்கு எதிராக ஜேம்ஸ் ஆண்டர்சன் 55 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் முடிந்து 2ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் எல்லிசன் 52 பந்து டக், இங்கிலாந்தின் பீட்டர் சச் 51 பந்துகள் டக், இன்று (24-8-19) மே.இ.தீவுகளின் மிகுவெல் கமின்ஸ் 45 பந்துகளில் டக் அடித்து 5ம் இடத்தில் நுழைந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் மிகப்பின்னால் இர்பான் பத்தான், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த் ஆகியோர் 29 பந்துகளில் டக் அவுட் ஆகி இடம்பெற்றுள்ளனர். முனாப் படேல் 28 பந்து டக் எடுத்து கடைசியாக மலிங்காவுடன் இடம்பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x