

பேசல்,
ஸ்விசர்லாந்தின் பேசல் நகரில் நடந்து வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது முறையாக இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து பைனலுக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த இருமுறை தொடர்ந்து வெள்ளிப்பதக்கங்களை வென்ற சிந்து இந்த முறை தங்கம் வெல்வார் என்று எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பேசல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் சீன வீராங்கனை சென் யு பெயை எதிர்த்து களம் கண்டார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து.
40 நிமிடங்கள் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-வது நிலையில் உள்ள சீன வீராங்கனை யு பெயை 21-7, 21-14 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் சிந்து
தாய்லாந்தின் ரட்சனாக் இன்டானன் அல்லது ஜப்பானின் நோஜோமி ஒகுஹரா இருவருக்கும் இடையே நடக்கும் ஆட்டத்தில் வெல்லும் வீராங்கனையுடன் இறுதிஆட்டத்தில் சிந்து மோதுவார்.
தொடக்கத்தில் இருந்தே தனது சர்வீ்ஸ்கள், ஷாட்களில் சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இதனால் சீன வீராங்கனை சென்னைக் காட்டிலும் முதல் செட்டில் 5-3 என்று முன்னிலைப் பெற்றார். அதன்பின் தொடர்ந்து அபாரமாக ஆடிய சிந்து 11-3 என்ற கணக்கில் முன்னேறி சீன வீராங்கனையை பின்னுக்கு தள்ளி முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டில் சிந்துக்கு கடும் போட்டியளித்தார் சீன வீராங்கனை சென். 3-3 என்ற புள்ளிக்கணக்கில் இருவரும் சரிசமமாக மோதினார்கள். ஆனால், தனது முன்கை ஆட்டம், பிளேஸ்மெண்ட், மற்றும் புல் ஷாட்களால் சீன வீராங்கனைக்கு கடும்நெருக்கடியை சிந்து அளித்தார். இதனால், புள்ளிக்கணக்கில் 10-6 என்று சிந்து முன்னிலை பெற்றார். சீன வீராங்கனையின் பலவீனத்தை பயன்படுத்திய சிந்து தொடர்ந்து முன்னேறி 11-7 என்று கணக்கிலும், அதன்பின் 17-9 என்ற கணக்கிலும் முன்னோக்கி சென்றார். முடிவில் 21-14 என்ற கணக்கில் சிந்து வென்றார்.
பிடிஐ