

பாஜக தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 66. டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது பல கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார் என்று சேவாக், கம்பீர் இருவரும் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.
டெல்லி கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவராகவும் பிசிசிஐ முன்னாள் துணைத்தலைவராகவும் செயல்பட்டவர் அருண் ஜேட்லி.
இந்நிலையில் தன் இந்தியக் கனவை நிறைவேற்றியவர் அருண் ஜேட்லி என்று அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக், தன் சமூகவலைத்தளத்தில் ஜேட்லி மறைவை வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ]
“அருண் ஜேட்லிஜி மறைவு எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. பொதுவாழ்க்கையில் பெரிய சேவையாற்றிய அவர் டெல்லி வீரர்கள் பலர் இந்தியாவுக்கு விளையாட பெரும் பங்காற்றினார் ஜேட்லி. டெல்லியிலிருந்து பல வீரர்களுக்கு உயர்மட்ட வாய்ப்புகள் ஒரு சமயத்தில் கிட்டாமல் இருந்தது. ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் அவரது தலைமையில் நான் உட்பட பல வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. வீரர்களுகு என்ன தேவை என்பதை ஆர்வமுடன் கேட்டறியும் அவர் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்.
தனிப்பட்ட முறையில் அவருடன் மிக அழகான உறவு முறை எனக்கு இருந்து வந்தது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நேசத்துக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி. ” என்று பதிவிட்டுள்ளார் சேவாக்.
முன்னாள் தொடக்க வீரரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், ஜேட்லியை ‘தந்தை போன்ற ஆளுமை’ என்று வர்ணித்துள்ளார்.
“தந்தை என்பவர் நமக்கு பேசக்கற்றுக் கொடுப்பவர், ஆனால் தந்தை போல் ஆளுமை படைத்தவர் எப்படி சொற்பொழிவாற்றுவது என்பதைக் கற்றுக் கொடுப்பவர். நடப்பதற்கு சொல்லிக்கொடுப்பவர் தந்தை, ஆனால் முன்னோக்கி வீறுநடை போடக் கற்றுக்கொடுப்பவர் தந்தை போன்ற ஆளுமை, தந்தையானவர் நமக்கு பெயர் சூட்டுவார், ஆனால் தந்தை போன்ற ஆளுமை நமது அடையாளத்தை அளிப்பார். ஸ்ரீ அருண் ஜேட்லிஜியுடன் என்னில் ஒரு அங்கம் போய் விட்டது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.