Published : 08 Jul 2015 05:08 PM
Last Updated : 08 Jul 2015 05:08 PM

நெஞ்சைத் தாக்கிய பந்து: இலங்கையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

பாவலன் பத்மநாதன் என்ற இலங்கையைச் சேர்ந்த, பிரிட்டிஷ் கிளப் கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் ஆடும் போது பந்து நெஞ்சைத் தாக்கியதில் அகால மரணமடைந்தார்.

சர்ரேயில் உள்ள பிரிட்டிஷ் தமிழ் லீக் டிவிஷன் 3-யைச் சேர்ந்த மனிபாய் பாரிஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்காக 24 வயதான பாவலன் பத்மநாதன் ஆடி வந்தார்.

கடந்த ஞாயிறன்று லாங் டிட்டன் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பந்து ஒன்று அவரது நெஞ்சைத் தாக்கியது. இது குறித்து அவருடன் விளையாடிய எதிர்முனை வீரர் ஒருவர் கொழும்பு மிரர் பத்திரிகையில் கூறும்போது, “அவர் நெஞ்சில் பந்து பட்டபோது, நான் மறுமுனையிலிருந்து அவரது நிலை பற்றி கேட்டேன். ஆனால் அவர் கைக் கட்டை விரலை உயர்த்தி ஒன்றுமில்லை என்றார்.

ஆனால் ஸ்டம்ப்களுக்கு பின்னால் நெஞ்சைப் பிடித்தபடி சென்ற அவர் திடீரென சுருண்டு விழுந்தார்” என்று கூறியுள்ளார்.

மைதானத்துக்கு உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இவரது அகால மரணத்தினால் அவர் விளையாடிய கிளப் வீரர்கள், நிர்வாகிகள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சர்ரே கிளப் பாவலன் பத்மநாதன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x