Published : 23 Aug 2019 07:49 PM
Last Updated : 23 Aug 2019 07:49 PM

ஒரேயொரு வீரர் மட்டும் இரட்டை இலக்கம்: ஆஸி. ஆக்ரோஷத்துக்கு 67 ரன்களுக்கு மடிந்தது இங்கிலாந்து 

லீட்ஸ்:

ஹெடிங்லீயில் நடைபெறும் ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியுமான 3வது டெஸ்ட் போட்டியில் 179 ரன்களை வைத்துக் கொண்டு வீசிய ஆஸ்திரேலியா இங்கிலாந்தை நொறுக்கியது, இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு தங்கள் முதல் இன்னிங்சில் சுருண்டது.

இங்கிலாந்து அணியில் ஜோ டென்லி மட்டுமே 12 ரன்களை அதிகபட்சமாக எடுத்து இரட்டை இலக்கம் எட்டிய ஒரே வீரரானார். மற்றவர்கள் ஸ்கோர்:,4,1 9,9,0,8,4,5,5 என்று தொலைபேசி எண்ணானது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் முன்னிலை 112 ரன்கள் என்ற நிலையில் ஆஷஸ் தொடரை வெல்வதில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் மிரட்டலாக வீசி 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் பேட்டின்சன் 5 ஒவர் 2 மெய்ட்ன 9 ரன் 2 விக்கெட்டுகளையும் கமின்ஸ் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து பேட்ஸ்மென்களும் தளர்வான சில ஷாட்களை ஆடினர், சுருக்கமாக ஆஸ்ட்ரேலிய ஆக்ரோஷத்திற்கும் லைன் மற்றும் லெந்திற்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. 27.5 ஓவர்களே தாக்குப் பிடித்தது. டேவிட் வார்னர் மொத்தம் 3 கேட்ச்களைப்பிடித்தார்.

ஜேசன் ராய் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டி எனக்கு வராது என்று கூறுவது போல் ஹேசில்வுட்டை ஒரு பவுண்டரி அடித்துப் பிறகு வைடு பந்தை விரட்டி வார்னர் கையில் கேட்ச் ஆகி 9 ரன்களில் வெளியேறினார். ஜோ ரூட் 2 பந்துகளே தாக்குப் பிடித்து ஹேசில்வுட்டின் அதியற்புத பந்துக்கு வார்னரிடம் கேட்ச் ஆனார்.

ரோரி பர்ன்ஸ் 9 ரன்களில் பாட் கமின்ஸின் பம்ப்பர் பந்தை லெக் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஜேம்ஸ் பேட்டின்சன் மிகவும் வெளியே வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் பேட்டை விட்டு எட்ஜ் ஆகி வார்னர் கேட்சுக்கு இரையானார். ஜோ டென்லி தடவு தடவென்று தடவி 12 ரன்கள் எடுத்த நிலையில் அவரது வேதனையை பேட்டின்சன் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஜானிபேர்ஸ்டோ 4 ரன்களில் ஹேசில்வுட்டிடம் வெளியேற இங்கிலாந்தின் நம்பிக்கை சரிந்தது.

உணவு இடைவேளை முடிந்து கிறிஸ் வோக்ஸ் கமின்சின் முதல் பந்திலேயே வெளியேறினார். ஜோஸ் பட்லர் ஷார்ட் கவரில் நேராக கேட்ச் கொடுத்தார், பொறியில் சிக்கினார், படுமோசமான ஸ்ட்ரோக். ஆர்ச்சரை கமின்ஸும், லீச்சை ஹேசில்வுட்டும் வீட்டுக்கு அனுப்ப இங்கிலாந்தின் படுமோசமான பேட்டிங் அம்பலமாகி 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x