

ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர்களில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பேட்டிங் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் பவுலிங் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தலைமைப் பயிற்சியாளராக சைமன் கேடிச் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்தின் மைக் ஹெசன் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2018 ஐபிஎல் சீசன் மகாதோல்விகளுக்குப் பிறகு டேனியல் வெட்டோரி அனுப்பப்பட்டார் அவரது இடத்திற்கு கேரி கர்ஸ்டன் வந்தார்.
நெஹ்ரா, கர்ஸ்டன் இருவரும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலியுடன் அணியின் தலைமைத்துவக் குழுவில் இருந்தனர். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணி வலுவான அணியைக் கொண்டிருந்தும் அதை விட வலுவான கேப்டனைக் கொண்டிருந்தும் 2016க்குப் பிறகு இறுதிக்குள் நுழையவேயில்லை.
இந்த மாற்றங்கள் தொடர்பாக ஆர்சிபி சேர்மன் சஞ்சய் சுரிவாலா கூறும்போது ஒரே பயிற்சியாளர் என்ற முறைக்குத் திரும்பினால் உயர்ந்தபட்ச ஆட்டத்திறன் என்ற பலன் கிடைக்கும் என்றார்.
மேலும் மைக் ஹெஸன், சைமன் கேடிச்சின் அனுபவம் வெற்றிப் பண்பாட்டை ஆர்சிபி அணிக்குள் வளர்த்தெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் சுரிவாலா.
3 முறை ஐபிஎல் இறுதிக்குள் ஆர்சிபி நுழைந்தாலும் ஒரு முறை கூட சாம்பியன் ஆனதில்லை.
மைக் ஹெஸன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கோச்சிங் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர், கிங்ஸ் லெவன் 6ம் இடத்திற்குதான் வந்தது, அதோடு மட்டுமல்லாமல் கேப்டன் அஸ்வினின் களநடத்தைகளும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியதும் குறிப்பிடத்தக்கது.
மாறாக சைமன் கேடிச் கரீபியன் பிரீமியர் லீகில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த போது இந்த அணி 2017, 2018 - தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த மாற்றங்கள் 2020 ஐபிஎல் தொடரிலாவது விராட் கோலிக்கு கோப்பையைத் தூக்கும் வாய்ப்பை அளிக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.