Published : 23 Aug 2019 11:43 AM
Last Updated : 23 Aug 2019 11:43 AM

தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை: சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அதிரடி

புதுடெல்லி,
தேசிய ஊக்க மருந்து ஆய்வு மையத்தின்(என்டிடிஎல்) அங்கீகாரத்தை அடுத்த 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு(டபிள்யுஏடிஏ) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் இனிமேல் வீரர்,வீரங்கனைகளின் சிறுநீர், ரத்த மாதிரிகளை இந்தியாவில் ஆய்வு செய்ய முடியாது, வெளிநாடுகளில் மட்டுமே பரிசோதிக்க முடியும் என்பதால், அதன் செலவு பன்மடங்கு உயரும்.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்குள் பிசிசிஐ அமைப்பை கொண்டுவர வேண்டும் என்று சமீபத்தில் மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நிர்பந்தம் செய்து உள்ளே வரவைத்தது.

இந்த நிலையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆய்வகத்துக்கே இப்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு பெரிய தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான 'வடா' அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், " இந்திய ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனை மையத்தை நாங்கள் ஆய்வு செய்தபோது, சர்வதேச தரத்துக்கு ஈடான வகையில் அதன் ஆய்வகங்கள் இல்லை என்பதால் அடுத்த 6 மாதங்களுக்கு ஆய்வகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வடா'வின் விசாரணையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனை மையத்தின் பரிசோதனை முறைகள், செயல்பாடுகள் அனைத்தும் 'வடா'வின் விதிமுறைகளுக்கு ஈடாகவும், சர்வதேச தரத்தில் அமையவில்லை என்று குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த ஒரு ஆண்டுக்குள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை மிகப்பெரிய பின்னடைவாகும். இந்தத் தடை கடந்த 20-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த தடையின் மூலம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வீரர்கள், வீராங்கனைகளிடம் இருந்து ரத்தம், சிறுநீர் மாதிரிகளை சேகரிக்க எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால், அதை பரிசோதிக்க முடியாது, அதற்கு வெளிநாடுகளில் இருக்கும் 'வடா' அங்கீகாரம் பெற்ற ஆய்வு மையத்தைத்தான் இனிமேல் அடுத்த 6 மாதங்களுக்கு நாட முடியும்.

'வடா'வின் தடையை எதிர்த்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆய்வு மையம் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் அடுத்த 21நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ள முடியும்.

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் நரேந்திர பத்ரா கூறுகையில், " வீரர், வீராங்கனையின் ரத்த,சிறுநீர் மாதிரிகளை அடுத்த நாட்டில் உள்ள ஆய்வகம், அதாவது பாங்காக்கில் உள்ள ஆய்வுகத்துக்கு அனுப்பும் செலவுகளை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். அதற்கான செலவுகள் நிச்சயம் அதிகரிக்கும். இதனால் இனிமேல் மாதிரிகளை சேகரிக்கும் அளவும் குறையும்.

ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 11 மாதங்களே இருக்கும் நிலையில் இதுபோன்ற தடை உத்தரவு மிகப்பெரிய பின்னடைவாகும். தேதிய விளையாட்டு கூட்டமைப்பு இந்த கூடுதல் செலவை தாங்கும் நிலையில் இல்லை " எனத் தெரிவித்தார்.

ஒருவேளை இந்த 6 மாத காலத்துக்குள் சர்வதேச தரத்துக்கு ஏற்பட 'வடா'வின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஆய்வகங்களை மாற்றி அமைத்து, பரிசோதனை முறைகளையும் மாற்றி அமைத்து விண்ணப்பித்தால், 6 மாதத்துக்குப்பின் மீண்டும் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குள் ஏறக்குறைய 5 ஆயிரம் பிரசோதனைகளை நடா செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோதனைக்கான அனைத்து செலவுகளையும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புதான் இனிமேல் ஏற்க வேண்டியது இருக்கும்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x