Published : 23 Aug 2019 08:43 AM
Last Updated : 23 Aug 2019 08:43 AM

மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆஸி.யை நொறுக்கினார்: 179 ரன்களுக்குச் சுருண்டது

ஹெடிங்லீ டெஸ்ட்டில் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலிய அணி தன் வழக்கமான சரிவுப்பாதையைக் கண்டடைய உதவியவர் மால்கம் மார்ஷலின் 2ம் அவதாரமான ஜோப்ரா ஆர்ச்சரே. 136/2 என்ற நிலையிலிருந்து மார்ச் ஃபாஸ்ட் தொடங்க ஆஸ்திரேலியா 179 ரன்களுக்குச் சுருண்டது.

ஜோப்ரா ஆர்ச்சர் 45 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்து மீண்டும் ஆஸ்திரேலியாவை படுத்தி எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் பார்முக்குத் திரும்பிய வார்னர் 61 ரன்களையும் ஸ்மித்திற்குப் பதிலாக ஆடும் லபுஷேன் 74 ரன்களையும் எடுத்தனர்.

மேகமூட்ட வானிலையில் பந்துகள் ஸ்விங் ஆக ஏகப்பட்ட பந்துகள் பேட்டைக் கடந்து சென்றது. டாஸ் வென்ற ஜோ ரூட் முதலில் ஆஸி.யை பேட் செய்ய அழைத்தார். அடிக்கடி மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு வெறுப்பேற்றிய தினத்தில் 25/2 என்ற நிலையிலிருந்து வார்னர், லபுஷேன் ஜோடி ஸ்கொரை 136 ரன்களுக்கு உயர்த்தியது, பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் புகுந்தார், ஆஸ்திரேலியாவுக்கு தங்களது சரிவு பாணியை நினைவூட்டினார்.

பேங்கிராப்ட் நீக்கப்பட்டு மார்கஸ் ஹாரிஸ் இறங்கினார், ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை ஸ்டம்பில் பிட்ச் செய்து சற்றே வெளியே எடுக்க அது ஹாரிஸின் நிலையையே மாற்றியது ஸ்கொயர் ஆனார். எட்ஜ் ஆகி வெளியேறினார். பிரமாதமான பந்து.

பிராட் இன்னொரு முனையில் ஆட்டிப்படைத்தார். மிக அருமையான தொடக்க ஸ்பெல்லில் அவருக்கு நல்ல பந்துகளில் விக்கெட் விழாமல் லெக் சைடு பந்தை கவாஜா தொட விக்கெட் கிடைத்தது, அதுவும் ரூட் மிகவும் சமயோசிதமான ரிவியூவினால் கிடைத்தது.

அதன் பிறகு வார்னர், லபுஷேன் தொடங்கினர், பந்து வீச்சில் சுணக்கம் ஏற்பட்டது பென் ஸ்டோக்ஸ் முதல் 5 ஒவர்களில் 30 ரன்களை கொடுத்தார், அந்தக் கட்டத்தில் ஓவருக்கு 6 ரன்கள் பக்கம் வந்து கொண்டிருந்தது. தொடக்கத்தில் வார்னர் குறைந்தது 20 பந்துகளில் 12 முறை பீட்டன் ஆனார். பிராட் இவரை தொடர்ச்சியாக 5 முறை பீட் செய்தார், ஆனால் வோக்ஸ், ஸ்டோக்ஸ் வந்த பிறகு அவர் தன் 30வது டெஸ்ட் அரைசதத்தை எடுத்தார்.

136/2 என்ற நிலையில் எக்ஸ்பிரஸ் ஜோப்ரா வந்தார், 3 ஓவர்களுக்குள் 3 ரன்களில் 3 விக்கெட் விழுந்தது. முதலில் வார்னர், ஹெட், வேட் ஆகியோரை வெளியேற்றினார். வேட் பாவம் துரதிர்ஷ்டவசமாக கால்காப்பில் வாங்கி உருண்டு சென்று பைல்களைத் தொந்தரவு செய்ய ஆட்டமிழந்தார். ஹெட்டுக்கு அருமையான பந்தை வீசியது பிராட், லேட் ஸ்விங்கில் ஆஃப் ஸ்டம்ப் மேல் பகுதியை தட்டிவிட்டுச் சென்றது பந்து. வோக்ஸ் பந்தில் டிம் பெய்ன் (11) வெளியேற டெய்ல் எண்டர்களை ஜோப்ரா காலி செய்தார், கமின்ஸ் டக், பேட்டிங்சன் 2 ஆகியோரை வீழ்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஆர்ச்சர். கடைசியில் ல்யனை எல்.பி. செய்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ஆஸ்திரேலியா 52.1 ஓவர்களில் 179 ரன்களுக்குச் சுருண்டது. இன்று ஆட்டத்தின் 2ம் நாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x