Published : 23 Aug 2019 08:11 AM
Last Updated : 23 Aug 2019 08:11 AM

சரிவில் நிமிர்ந்து நின்று அணியை நிமிர்த்திய ரஹானே: இந்திய பேட்டிங்கை முடக்கிய மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சு

லேசான கிரீன் டாப், ஸ்விங் ஆகும் டியூக்ஸ் பந்துகள், மணிக்கு 140145 கிமீ வேகத்தில் திறமையாக வீசக்கூடிய பவுலர்கள் இவையெல்லாம் ஒன்று சேர்ந்தால் கோலி உட்பட இந்திய அணிக்கு காலங்காலமாக எது நிகழ்ந்து வருகிறதோ நேற்று முதல் நாள் ஆட்டத்திலும் அது நிகழ்ந்தது.

புத்துணர்வு பெற்ற மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சு ‘சூப்பர் ஸ்டார்’ சூரப்புலிகளை இங்கு‘பேட்டிங்’ சுலபமல்ல ‘மேன்’ என்று எச்சரித்தது. டாஸ் வென்ற ஹோல்டர் இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. ரஹானே மட்டுமே தனது அடித்து ஆடும் இயல்புகளை கட்டுப்படுத்திக் கொண்டு கடினமான முறையில் நின்றே தீர்வது என்ற உறுதியுடன் ஆடி 81 ரன்களை எடுத்தார்.

இந்த ரஹானே இன்னிங்ஸ் அவரது வழக்கமான பாணி கவுண்ட்டர் அட்டாக் இன்னிங்ஸ் கிடையாது, 25/3 என்று திணறிய நிலையில் எப்போதும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்லை என்று ஆடும் வழக்கமுடைய ரஹானே நேற்று 32 பந்துகளில் 2 ரன்களை எடுத்தார், ஒரு கட்டத்தில் ஜேசன் ஹோல்டர், ரஹானேக்கு மட்டும் 4 மெய்டன்களை வீசினார். பிறகு மெல்லதான் ரஹானே பந்து பளபளப்பை இழந்து பவுலர்களும் கொஞ்சம் களைப்படைந்த பிறகு தனது ஆட்டத்தை ஆட முயன்றார். ஆனாலும் பழைய ரஹானே என்று கூற முடியாது, மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஆடி 163 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து கேப்ரியல் வீசிய சற்றே எழும்பிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற லெந்த் பந்தை கட்டா, ட்ரைவா என்று புரியாத இரண்டும்கெட்டான் ஷாட்டை ஆடி மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

தன்னுடைய இந்த இன்னிங்சில் முதலில் ராகுலுடன் (44) சேர்ந்து 68 ரன்களையும் பிறகு ஹனுமா விஹாரி (32) உடன் சேர்ந்து 82 ரன்களையும் சேர்த்ததே இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. ஆட்ட நேர முடிவில் ரிஷப் பந்த் 20 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடக்கத்தில் கிமார் ரோச் அபாரமான லெந்தில் வீசினார், லெந்த் பந்துகளே நன்றாக அவருக்கு எழும்பியது. மயங்க் அகர்வாலுக்கு பந்து உள்ளே வந்து நின்று சற்றே எதிர்த்திசையில் ஸ்விங் ஆக அவர் எட்ஜ் செய்ய வேண்டிய நிர்பந்தம். இதே ஓவரில் புஜாரா 2 ரன்களில் உடலுக்கு தள்ளி மட்டைய மட்டும் தொங்க விட்டார் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

கோலி இறங்கினார் பாயிண்டில் ஒரு பவுண்டரி பிறகு அழகான ஒரு நேர் பவுண்டரி அடித்த நிலையில் வேகம் மட்டுமே கோலியைக் காலி செய்ய முடியும் விவேகம் கை கொடுக்காது என்று முடிவெடுத்த கேப்ரியல் 3 ஷார்ட் பிட்ச் பந்துகளை அவருக்கு வீசினார். இதில் முதல் 2 பந்துகளில் சொதப்பிய கோலி 3வது பந்தை இன்னும் கூடுதலாகச் சொதப்பி, பந்தை விடலாமா வேண்டாமா என்ற இரண்டக மனோநிலையில் அதை ஏதோ செய்ய கல்லியில் கேட்ச் ஆனது.

ராகுலும், ரஹானேவும் கடும் போராட்டத்தில் 25/3 என்ற நிலையிலிருந்து உணவு இடைவேளையின் போது 68/3 என்று கொண்டு சென்றனர். ராகுல் சில நல்ல ஷாட்களை தளர்வான பந்துகளில் அடித்து 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ராஸ்டன் சேஸ் வீசிய சாதுவான லெக் திசை பந்தில் அதைவிட சாதுவாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ரஹானே, விஹாரி கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினர். ஒரு கட்டத்தில் ஓவருக்கு 7 ரன்கள் வீதம் வந்தது. இருவரும் 82 ரன்களைச் சேர்த்த நிலையில் 32 ரன்களில் இருந்த ஹனுமா விஹாரி, ரோச் பந்து ஒன்று ஸ்விங் ஆக ‘ஸ்கொயர்’ ஆனார். எட்ஜ் எடுத்து ஹோப்பிடம் கேட்ச் ஆனது.

ரஹானே சதம் எடுத்து 29 இன்னிங்ஸ்கள் ஆகிறது அவர் 81 ரன்களை கடினமாக உழைத்து எடுத்த நிலையில் கட்டா, டிரைவா என்று சொல்ல முடியாத ஒரு ஷாட்டில் மட்டை உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

இடையிடையே ரஹானேவை மட்டும் கோலி உட்கார வைக்காமல் இருந்திருந்தால் அவர் ஒரு தன்னம்பிக்கையான டெஸ்ட் பேட்ஸ்மெனாக சரளமாக ஆடியிருப்பார், கோலி போன்ற ஈகோயிஸ்ட்களினால் வீரர்களை உருவாக்க முடியாது, அழிக்கத்தான் முடியும், ஆனால் தன்னை அழிக்க முடியாது என்று நிமிர்ந்து நின்றார் ரஹானே, அணியையும் நிமிர்த்தியுள்ளார்.

ஆட்ட முடிவில் பந்த் 20 ரன்களுடனும் ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 203/6. மே.இ.தீவுகளில் ரோச் 3 விக்கெட்டுகளையும் கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும் சேஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹோல்டர் 15 ஒவர் 9 மெய்டன் 27 ரன்கள் விக்கெட் இல்லை. கமின்ஸ் பிரமாதமாக வீசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x