Published : 22 Aug 2019 03:21 PM
Last Updated : 22 Aug 2019 03:21 PM

‘இந்திய அணி யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை’: தோனியைத் தாக்கும் விமர்சனத்தை மறுக்கும் மனோஜ் திவாரி

தோனி அணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது பற்றிய முடிவை பிசிசிஐ எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பெங்கால் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கூறியதாக வந்த செய்திகளை மனோஜ் திவாரி மறுத்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் பெங்கால் பதிப்பில் இந்த நேர் காணல் வந்தது உண்மைதான். அந்த நேர்காணல் உண்மைதான் என்பதையும் திவாரி மறுக்கவில்லை, ஆனால் தோனி பற்றிக் கூறியதை மட்டும் ‘தவறான மேற்கோள்’ என்று தற்போது மறுத்துள்ளார்.

12 ஒருநாள் போட்டிகளில் ஆடிய மனோஜ் திவாரி, தோனி குறித்த முடிவை பிசிசிஐ எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

“தோனி அணிக்காக நிறைய செய்துள்ளார். நாட்டுக்காக சிறப்பாக ஆடியுள்ளார். சமீபத்தில் தோனி தன்னைத் தானே விலக்கிக் கொள்ள வேண்டும், நிறைய ஆடிவிட்டார் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்தார். தோனி வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்தாலும் பிசிசிஐ தோனி குறித்த முடிவை உடனடியாக எடுக்க வேண்டும். கடினமான அந்த முடிவை எடுப்பதில் பிசிசிஐ தயங்கக் கூடாது. தைரியம் காட்ட வேண்டிய நேரம் இது. நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தோனியின் கடந்த காலத்தை வைத்து அவருக்கு பிசிசிஐ தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது. நாட்டில் ஏகப்பட்ட திறமையான வீரர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்திய அணி எந்த ஒருவருடைய தனியுரிமைச் சொத்தல்ல. நாட்டின் அணியாகும். இதை மனதில் கொள்ள வேண்டும்” என்று கூறியதாக அந்த நேர்காணலில் தெரியவந்தது.

ஆனால் இப்போது நான் அப்படியே கூறவில்லை, தவறான மேற்கோள் என்று மறுத்ததோடு, தன் ட்விட்டர் பக்கத்தில் இணையத்தில் வெளியாவதை எல்லாம் நம்பவேண்டாம். என்னுடைய மவுனத்தை தவறாக மேற்கோள் காட்ட முடியுமா?” என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.

மனோஜ் திவாரி பிசிசிஐ எடுக்கும் உள்நாட்டு கிரிக்கெட் முடிவுகள் பலவற்றை எதிர்ப்பவர் என்பது தெரிந்ததே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x