தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் நிதான ஆட்டம் - 179/4

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் நிதான ஆட்டம் - 179/4
Updated on
2 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 67 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 83.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 54, டூ பிளெஸ்ஸி 48, டீன் எல்கர் 47 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் முஷ்டாபிஜுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும், ஜுபைர் ஹுசைன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தமிம் அரை சதம்

இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது. இம்ருள் கெய்ஸ் 5, தமிம் இக்பால் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 18.2 ஓவர்களில் 46 ரன்களை எட்டியபோது இம்ருள் கெய்ஸின் விக்கெட்டை இழந்தது. அவர் 73 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் வான் ஸில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மோமினுல் ஹக் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மர் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதையடுத்து தமிம் இக்பாலுடன் இணைந்தார் மகமதுல்லா. மைதானம் மெதுவாக இருந்ததால், இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க பவுலர்களை சோதித்தது. நிதானமாக ஆடிய தமிம் இக்பால் 119 பந்துகளில் அரைசதம் கண்டார். வங்கதேச அணி 144 ரன்களை எட்டியபோது எல்கர் பந்துவீச்சில் போல்டு ஆனார் தமிம் இக்பால். 129 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார்.

மகமதுல்லா 67

இதையடுத்து கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் களமிறங்க, 109 பந்துகளில் அரைசதம் கண்டார் மகமதுல்லா. 138 பந்துகளைச் சந்தித்த அவர் 10 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து வெளியேற, ஷகிப் அல்ஹசன் களமிறங்கினார். அந்த அணி 67 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது முறையாக மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. முஷ்பிகுர் ரஹிம் 16, அல்ஹசன் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், ஹார்மர், வான் ஸில், டீன் எல்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட வங்கதேசம் இன்னும் 69 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

சாதனைத்துளிகள்

7

வங்கதேசத்தின் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால், இம்ருள் கெய்ஸ் ஆகியோரின் விக்கெட்டை தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர்களான எல்கர், வான் ஸில் ஆகியோர் வீழ்த்தினர். டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களை தொடக்க வீரர்களே வீழ்த்துவது 7-வது முறையாகும்.

89

தமிம் இக்பால்-மகம துல்லா ஜோடி எடுத்த 89 ரன்களே தென் ஆப்பிரிக்கா வுக்கு எதிராக 3-வது விக்கெட் டுக்கு வங்கதேசத்தின் ஒரு ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

13

நேற்றைய ஆட்டத்தில் 13 ஓவர்களை வீசிய போதும் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. வங்க தேசத்துக்கு எதிராக 10 ஓவர் களுக்கு மேல் வீசி ஸ்டெயின் விக்கெட் எடுக்காதது இதுவே முதல்முறையாகும்.

67

சர்வதேச கிரிக்கெட் டில் நேற்று 67-வது அரை சதத்தை அடித்தார் தமிம் இக்பால். அதிக அரை சதமடித்த வங்கதேச பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தில் இருக் கும் அவர், டெஸ்ட் போட்டியில் 27 அரை சதங்களும், ஒருநாள் போட்டியில் 37 அரை சதங் களும், டி20 போட்டியில் 3 அரை சதங்களும் அடித்துள்ளார். ஷகிப் அல்ஹசன் 63 அரை சதங்களுடன் 2-வது இடத் தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in