Published : 22 Aug 2019 10:14 AM
Last Updated : 22 Aug 2019 10:14 AM

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

நார்த் சவுண்ட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இன்று விளையாடுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி வென்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைந்துள்ள இந்தத் தொடரின் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவின் நார்த் சவுண்ட் பகுதியில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ரிஷப் பந்த், ரோஹித் சர்மா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது.
சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்திய அணி 4 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்தால் ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, மொகமது ஷமி ஆகியோர் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெறுவார்கள். சுழற்பந்து வீச்சாளராக விளையாடும் லெவனில் இடம் பெறுவதில் அஸ்வின், குல்தீப் யாதவ் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.

இதுஒருபுறம் இருக்க பேட்டிங்கில் அணி சேர்க்கையை தேர்வு செய்வதில் விராட் கோலிக்கு பிரதான கவலை ஏற்படக்கூடும். பேட்
டிங் சேர்க்கையை அவர், சரியாக பெற முடிந்தால் அது ஒரு தந்திரோபாய வெற்றியாகவே கருதப்படும். ஹர்திக் பாண்டியா இல்லாததால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை விளையாடும் லெவனில் இடம் பெறச் செய்வதில் விராட் கோலி முனைப்பு காட்டக்கூடும். இந்த வகையில் அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இவர்கள் இருவரும் விளையாடும் லெவனில் இடம் பெற்றால் ஹனுமா விகாரி வெளியே அமரவைக்கப்படுவார். ஒருவேளை இந்திய
அணி 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கமுடிவு செய்தால் ஆல்ரவுண்டர் அடிப்படையில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் பரிசீலிக்கப்படக்கூடும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியானது குறுகிய வடிவிலான தொடர்களில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான திறனை வெளிப்படுத்தத் தவறியது. எனினும் அந்த அணி இந்த ஆண்டில்சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளது. உயிரோட்டமுள்ள ஆடுகளங்களில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றி அசத்தியிருந்தது.

அந்தத் தொடரில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 187 ரன்களிலும், 2-வது இன்னிங்ஸில் 132 ரன்களிலும் சுருட்டியிருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் அப்போதைய காலநிலை
யில் காணப்பட்ட பச்சை புற்கள் போர்த்திய ஆடுகளம் தற்போதும் கிடைக்கப்பெறுமா என்பது சற்று சந்தேகம்தான்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் திறமை வாய்ந்த இளம் வீரர்களாக ஷாய் ஹோப், ஜான் கேம்பல், ஷிம்ரன் ஹெட்மையர் ஆகி
யோர் திகழ்கின்றனர். ராஸ்டன் சேஸ், டேரன்பிராவோ ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். அதிலும் 50 விக்கெட்களை கைப்பற்றியுள்ள ராஸ்டன் சேஸ் நிலையான சுழற்பந்து வீச்ச்சாளராகவும் உள்ளார்.

26 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரகீம் கார்ன்வால் மீது சற்று எதிர்பார்ப்பு உள்ளது. 6 அடி உயரம் 5 அங்குலம் கொண்ட ரகீம் கார்ன்வால் 140 கிலோ எடை உடையவர். அறிமுக வீரராக இடம் பெற்றுள்ள அவர், 55 முதல்தரபோட்டிகளில் விளையாடி 260 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் ரகீம் கார்ன்வால் சிறப்பாக செயல்பட்டதால் தேசிய அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

ஆடுகளத்தில் புற்கள் காணப்படும் பட்சத்தில் ஜேசன் ஹோல்டர், கேமார் ரோச், ஷனான் கேப்ரியல் ஆகியோரை உள்ளடக்கிய வேகப் பந்து வீச்சு கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லைகள் கொடுக்க வாய்ப்புஉள்ளது. இவர்களில் ஜேசன் ஹோல்டர் சமீப
காலமாக டெஸ்ட் போட்டிகளில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 40 விக்கெட்களை வேட்டையாடி உள்ள அவர், பேட்டிங்கில் 565 ரன்களையும் சேர்த்துள்ளார்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விகாரி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா, குல்தீப்யாதவ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார்.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜான் கேம்பல், டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மையர், ஷாய் ஹோப், கீமோ பால், ஷமர் ப்ரூக்ஸ், கிரெய்க் பிராத்வெயிட், ராஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேன் டவுரிச், ஷனான் கேப்ரியல், கேமார் ரோச்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆண்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் விளாசி அசத்தினார். தற்போதைய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டித் தொடரில் இரு சதம் விளாசி உள்ள விராட் கோலி அதே பார்மை டெஸ்ட் தொடரிலும் வியாபிக்கச் செய்யக்கூடும்.

இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் கேப்டனாக அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கின் (19 சதங்கள்) சாதனையை சமன் செய்வார். இந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 25 சதங்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இதுவரை ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள் விளாசியுள்ளார். இதில் 6 இரட்டை சதங்களும் அடங்கும்.

ஆண்டிகுவாவில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த தோனியின் கேப்டன்ஷிப் சாதனையையும் விராட் கோலி சமன் செய்யக்கூடும். தோனி 60 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 27 வெற்றிகளை தேடிக்கொடுத்திருந்தார். அதேவேளையில் இதுவரை 46 ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள விராட் கோலி 26 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

நேரம்: இரவு 7; இடம்: ஆண்டிகுவா

நேரலை: சோனி டென் 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x