

ஜோப்ரா ஆர்ச்சரின் திறமை குறித்து இங்கிலாந்து முன்னாள், இந்நாள் வீரர்கள் உணர்ச்சிகரத்தின், எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் இருந்தாலும் ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எங்கள் கடமை பவுன்சர் வீசுவதில் யார் சிறந்தவர் என்ற போட்டியில்லை, ஆஷஸ் தொடரை வெல்வதுதான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச 20ம் தேதி சந்தித்த ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:
இங்கிலாந்தை வீழ்த்துவதுதான் எங்கள் திட்டம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். யார் அதிவேக பவுன்சர்கள் வீசப்போகிறார்கள் என்ற உணர்ச்சிகர போட்டியில் எங்கள் கவனம் சிறிதும் இல்லை.
டெஸ்ட் மேட்சை வெற்றி பெறத்தான் வந்திருக்கிறோமே தவிர, எவ்வளவு ஹெல்மெட்டுகளைப் பதம் பார்க்கப்போகிறோம் என்பதற்காக வரவில்லை. இதுதான் உண்மை. இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் அதுதான் குறிக்கோள்.
மைக் ஆதர்ட்டன் அன்று சுவாரசியமான ஒன்றை கூறினார், அதாவது இது வித்தியாசமான ஒரு ஆஸ்திரேலிய அணி என்றார், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தாடி வளர்த்துக் கொண்டு எவ்வளவு வேகமாக வீச முடியுமோ அவ்வளவு வேகமாக வீசுவது என்ற போட்டியெல்லாம் இல்லை.
இல்லை நாங்கள் இங்கு டெஸ்ட் போட்டியை வெல்ல வந்திருக்கிறோம். எவ்வளவு காயங்கள், சிராய்ப்புகளைக் கொடுக்கிறோம் என்பதற்காக அல்ல.
வெற்றி அணியைத்தான் தேர்வு செய்வோமே தவிர, யாருக்கு அடிகொடுத்தால் சரியாக இருக்கும் என்று அணியைத் தேர்வு செய்ய முடியாது. பவுன்சர் ஆட்டத்தின் ஒரு அங்கம்தான் அதனால் விக்கெட்டை வீழ்த்த முடியுமென்றால் பயன்படுத்துவோம், மற்றபடி வெற்றி என்பதே ஒரே குறி.
இவ்வாறு கூறினார் ஜஸ்டின் லாங்கர்.