Published : 21 Aug 2019 12:00 PM
Last Updated : 21 Aug 2019 12:00 PM

முதல் டெஸ்ட்டிற்கு ரோஹித்தா ரஹானேயா? ரிஷப் பந்த்தா? சஹாவா? - கோலி திணறல் 

ஆண்டிகுவா:

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமையன்று தொடங்கவுள்ள நிலையில் அணித்தேர்வில் கேப்டன் விராட் கோலிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது முதல் டெஸ்ட்டிற்கு 5 பவுலர்களுடன் களமிறங்க முடிவெடுத்தால் ரோஹித் சர்மா, ரஹானே இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும், இதில் யாரை நீக்குவது என்பதில் விராட் கோலிக்குத் தலைவலி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

4 பவுலர்களுடன் களமிறங்கினால் ரோஹித் சர்மா, ரஹானே இருவரும் ஆட வாய்ப்புள்ளது, ஆனால் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர் என்று முடிவெடுத்தால் இருவரில் யாரைத் தேர்வு செய்வது என்பதில் கோலிக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

அதே போல் டெஸ்ட் விக்கெட் கீப்பராக இருந்த சஹா காயத்திலிருந்து மீண்டு அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் இவருக்கு வாய்ப்பளிப்பதா அல்லது ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த்தை தேர்வு செய்வதா என்பதிலும் கோலிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

பவுலிங்கில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா நிச்சயம் இடம்பெறுவார்கள் காரணம் மே.இ.தீவுகளின் பிட்ச்கள் தற்போது கிரீன் டாப் பிட்ச்களாகி விட்டன. அப்போது குல்தீப் யாதவ் ஒரே ஸ்பின்னரகா நீடிப்பார். ஏனெனில் பயிற்சியாட்டத்தில் அஸ்வின் வீசாததும் அவரது டெஸ்ட் இடம் குறித்த ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி ராகுல், அகர்வால், புஜாரா, கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, பந்த்/சஹா, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் என்று களமிறங்க வாய்ப்புள்ளது, இல்லையெனில் ஹனுமா விஹாரி தனது ஸ்பின் பவுலிங்கை வீச முடியும் என்று கோலி முடிவெடுத்தால் ரஹானே, ரோஹித் சர்மா ஆகியோரில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய முடியும்.

அல்லது ரவீந்திர ஜடேஜா ஒரு ஆல்ரவுண்டராகத் தேவைப்படுவார் என்று கோலி விரும்பினாலும் ரோஹித், ரஹானே இருவரும் ஆட முடியாது என்றே தெரிகிறது.

ஆனால் ராகுல் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ட்ராப் செய்யப்பட்டு ஹனுமா விஹாரி தொடக்க வீரராகக் களமிறங்கினார். எனவே கடந்த ஓராண்டாக ராகுலின் டெஸ்ட் ஆட்டத்தின் சொதப்பல்களைப் பார்க்கும் போது ஹனுமா விஹாரியைத் தொடக்கத்தில் இறக்கி ராகுலை ட்ராப் செய்தால் ரோஹித் சர்மா, ரஹானே ஆகிய இரண்டு வீரர்களும் மிடில் ஆர்டரை வலு சேர்க்க அணியில் சேர்க்க வாய்ப்பிருக்கிறது. ஒரு கூடுதல் ஸ்பின் வாய்ப்பும் கிடைக்கிறது.

ஆகவே ரோஹித் சர்மா, ரஹானே, ரிஷப் பந்த், சஹா, ஜடேஜா, அஸ்வின் கேள்விகள் கோலிக்கு கடும் அணித்தேர்வு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது, அனைவரையும் திருப்தி செய்ய முடியாவிட்டாலும் மூத்த வீரர்களை திருப்தி செய்யும் முடிவுக்குத்தான் கோலி வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x