Published : 20 Aug 2019 09:30 PM
Last Updated : 20 Aug 2019 09:30 PM

பஜ்ரங் புனியா, தீபா மாலிக்கிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா; ஜடேஜா உட்பட 19 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

விளையாட்டுத் துறையில் தலைசிறந்த சாதனையாளர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டு காலத்தில் விளையாட்டுத்துறையில் மிகச் சிறந்த வீரர், வீராங்கனைகளாக திகழ்ந்தவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவோருக்கு அர்ஜூனா விருதும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும் வழங்கப்படுகிறது.

விளையாட்டுத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு தியான்சந்த் விருதும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பிற்கு அளப்பரிய பங்காற்றிய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு ராஷ்ட்ரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது. பல்கலைகழகங்களுக்கு இடையேயான போட்டியில் ஒட்டுமொத்த சாதனை படைக்கும் பல்கலைகழகத்திற்கு மௌலானா அபுல்கலாம் ஆசாத் (MAKA) கோப்பையும் வழங்கப்படுகிறது.

இதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு பரிந்துரைத்தது. இதிலிருந்து தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசு விருது பெறுவோர் பட்டியலை அறிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

துரோணாச்சாரியா விருது, பேட்மிண்டன் பயிற்சியாளர் விமல் குமார், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா, தடகள பயிற்சியாளர் மொகீந்தர் சிங் தில்லான் ஆகிய மூன்று பேருக்கும், வாழ்நாள் சாதனையாளருக்கான விருது, ஹாக்கி பயிற்சியாளர் மெர்ஸ்பன் பட்டேல், கபடி பயிற்சியாளர் ராம்பீர்சிங் கோக்கர், கிரிக்கெட் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

அர்ஜூனா விருது, சிறந்த உடற்கட்டு பிரிவுக்காக எஸ். பாஸ்கரனுக்கும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் உள்ளிட்ட 19 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

தியான்சந்த் விருது, மனுவேல் ஃபிரட்ரிக்ஸ், அரூப் பஸாக், மனோஜ்குமார், நித்தன் கீர்த்தனே மற்றும் லால்ரெம்சங்கா ஆகிய 5 பேருக்கும், ராஷ்ட்ரிய கேல் புரஸ்கார் விருதுக்கு ககன் நரங் துப்பாக்கி சுடும் அறக்கட்டளை, கோ ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் ராயலசீமா வளர்ச்சி அறக்கட்டளைக்கு வழங்கப்படவுள்ளது.
மௌலானா ஆசாத் கோப்பை, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைகழகத்திற்கு வழங்கப்படும்.

இந்த விருதுகள் இம்மாதம் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x