Published : 20 Aug 2019 06:56 PM
Last Updated : 20 Aug 2019 06:56 PM

ஜோ ரூட் பேட்டிங்கில் சொதப்புவதால் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்: முன்னாள் ஆஸி. வீரர் கடும் தாக்கு 

பொதுவாக சர்ச்சைக்குரிய கேட்ச்களை எடுத்ததாக ஏமாற்றி அவுட் வாங்குவதில் ஆஸ்திரேலியர்கள்தான் கில்லாடி, ஆனால் மற்றவர்கள் அதையே அவர்களுக்குச் செய்தால் அந்த வீரரை ‘ஏமாற்றுக் காரர்’ ‘நயவஞ்சகர்’, மோசடிப் பேர்வழி என்றெல்லாம் சாடுவது வழக்கம்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை நடிகர் பார்த்திபன் ஒரு படத்தில் ஒரு வசனம் எழுதியிருப்பார் ‘எனக்கும் தப்பு செய்யறதுப் பிடிக்கும், ஆனா செய்யறது நானா இருக்கணும்’. இதுதான் ஆஸி. அணியின் நிலைப்பாடும்.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில் ஸ்மித்துக்குப் பதிலி வீரராக பேட்டிங்கில் களமிறங்கிய லபுஷேன் அரைசதம் அடித்து ஆட்டமிழக்கக் காரணமானது ஜோ ரூட் பிடித்த (அல்லது பிடிக்காத) சர்ச்சைக்குரிய கேட்ச். ரீப்ளேயில் தரையில் பட்டுத்தான் பிடித்தார் என்பது தெரிந்தது, லபுஷேன் கோபப்பட்டார், அதோடு இல்லாமல் ஜோ ரூட் அவரிடம் ஏதோ வாக்குவாதமும் செய்தார்.

இந்த நிகழ்வு பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய பவுலர் ஆண்டி பிகெல் கடுமையாக விமர்சனம் செய்தார்.

“அந்தப் பந்து நேரடியாக தரையில்படாமல் செல்லவில்லை. மேலும் ஒரு வீரர் காலில் பட்டுச் சென்றதால் அது முன்னால் பிட்ச் ஆகவே வாய்ப்பு. அதனால் தரையில் பட்டுத்தான் எடுத்தோம் என்பதை ரூட் நிச்சயம் அறிந்தேயிருப்பார். பீல்டருக்குத் தெரியாமல் நிச்சயம் இருக்கவே இருக்காது.

இது ஒரு வெளிப்படையான ஏமாற்று வேலை.

இதைவிடவும் மோசமானது ரீப்ளேயை லபுஷேனும் பார்த்து அது தரையில் பட்டுச் சென்றது என்பது லபுஷேனுக்கும் தெரிந்திருக்கும் போது ரூட் அவருக்கு செண்ட் ஆஃப் கொடுத்தது மிகப்பெரிய தவறு.

சரி ஆட்டமிழந்து செல்லும் போது, ‘நான் கேட்ச் பிடிக்கவில்லை, இதற்காக மூன்றாம் நடுவர் முறையீட்டுக்காக நீங்கள் சென்றிருக்க வேண்டியதில்லை’ என்று கூறியிருந்தால் கூட ஒரு ஜெண்டில்மென் அணுகுமுறை எனலாம்.

ஜோ ரூட் கரியரில் இது ஒரு தாழ்வான தருணம் காரணம் அவர் பேட்டிங்கில் ரன்கள் எடுப்பதில்லை, இதனால் கடும் மன அழுத்தம் அவரிடத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனால் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்கிறார்” என்றார் பிகெல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x