Published : 20 Aug 2019 04:51 PM
Last Updated : 20 Aug 2019 04:51 PM

ஸ்ரீசாந்துக்கு 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை: பிசிசிஐ முன்தேதியிட்டு அமல் செய்தது

புதுடெல்லி,

2013-ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதி்தது பிசிசிஐ அமைப்பின் குறைதீர்ப்பு அதிகாரி டி.கே.ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், ஸ்ரீசாந்துக்கு இந்த தண்டனை முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 2013ம்ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதியில் இருந்து இந்த தண்டனை அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி பார்த்தால் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஸ்ரீசாந்த் எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க முடியாது. அதன்பின் ஸ்ரீசாந்த் பங்கேற்கலாம்.

ஆனால், தற்போது ஸ்ரீசாந்த்துக்கு 36 வயதாகும் நிலையில் அடுத்த ஆண்டு தடை முடியும் போது ஏறக்குறைய 37 வயதை எட்டிவிடுவார். வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஒருவர் 37 வயதில் திறன்மிக்க வகையில் பந்துவீசுவது என்பது கடினமான செயல்தான்.

இருப்பினும், ஸ்ரீசாந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கான தடை ஒட்டுமொத்தமாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு விலகுவது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும்.

2013-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் போது ஸ்பாட் பிக்ஸிங் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மூன்று வீரர்களையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2015-ம் ஆண்டு மூன்று வீரர்கள் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி நீதிமன்றம் விடுவித்தது. இருப்பினும் இந்த 3 வீரர்களுக்கும் வாழ்நாள் தடைவிதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.

இந்த தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அசோக் பூஷன், கே.எம். ஜோஸப் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தனர்.

அதில், பிசிசிஐ ஒழுங்குமுறைக் குழு விதித்த வாழ்நாள் தடையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக 3 மாதங்களுக்குள் தண்டனையை அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

இதன்படி கடந்த 7-ம் தேதி பிசிசிஐ அமைப்பின் குறைதீர்ப்பு அதிகாரி டி.கே.ஜெயின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்துக்கான தண்டனை விவிரத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி " இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் பிசிசிஐ மற்றும் அதுசார்ந்த எநத்விதமான வர்த்தகரீதியான கிரிக்கெட் போட்டிகளிலும் 7 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கிறோம். இந்த தடை முன்தேதியிட்டு அதாவது அவர் மீது பிசிசிஐ ஒழுங்குமுறை குழு விதித்த தடைக் காலத்தில் இருந்து அமலுக்கு வரும். அதாவது 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதியில் இருந்து இந்த 7 ஆண்டு தடை அமலுக்கு வரும். இந்த தடை 2020ம் ஆண்டுஆகஸ்ட் மாதம் முடிகிறது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் ஸ்ரீசாந்த் பிசிசிஐ மற்றும் அதுசார்ந்த எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடையில்லை.

ஸ்ரீசாந்த்துக்கு தற்போது 36 வயதாகிவிட்டது, ஒரு வேகப்பந்துவீச்சாளராக அவரின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது. நீதிவழங்குவதை நீண்டகாலத்துக்கு தடை செய்ய முடியாது. " எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x