

லண்டன்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சோபிக்காததையடுத்து ஆல்ரவுண்டர் மொயின் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது ஆஃப் ஸ்பின் தரமாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த 12 மாதங்களில் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் இருந்த மொயின் அலி, திடீரென தன் கிரிக்கெட் வாழ்வில் புதிய தாழ்வைச் சந்தித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 172 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையே கைப்பற்றினார் அதாவது எதிரணியின் நேதன் லயன் தன் ஆஃப் ஸ்பின் மூலம் இங்கிலாந்து வீரர்களை கதிகலக்கிய பிட்சில் மொயின் அலி திணறினார். மேலும் பேட்டிங்கில் நேதன் லயனிடம் இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்து மொத்தம் 8 முறை அவரிடம் ஆட்டமிழந்து லயனின் செல்லப்பிள்ளையானார் மொயின் அலி.
இதனையடுத்து அவருக்கு சற்று இடைவெளி தேவை என்று கருதிய இங்கிலாந்து அவரை அணியிலிருந்து நீக்கியது, அவரும் தன் கவுண்ட்டி அணியான வொர்ஸ்டர்ஷயருக்குத் திரும்பினார். இங்கும் சரியாக வீச முடியாததால் திடீரென மிதவேகப்பந்து வீச்சுப் பாணிக்கு மொயின் அலி மாறினார்.
நார்த்தாம்ப்டன் ஷயருக்கு எதிராக ஆஃப் ஸ்பின் மீண்டும் கைகொடுக்காத பட்சத்தில் அவர் ஸ்பின்னைக் கைவிட்டு மிதவேகப்பந்துகளை முயற்சி செய்தது நடந்தது. முதலில் 109/0 என்று அவரது பந்து வீச்சு இருந்தது கடைசியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 126/3 என்று முடித்தார்.
மாற்றுவது எப்போதும் பயன் தராது, 1996 உலகக்கோப்பையில் ஜெயசூரியா இந்திய வீச்சாளர் மனோஜ் பிரபாகரை வெளுத்து வாங்க, அவர் அதே போட்டியில் கடைசியில் ஆஃப் ஸ்பின் வீசி கடைசியில் அவரது கரியரே முடிவுக்கு வந்தது.
மொயின் அலி போன்ற திறமையான வீரர்களின் கரியரும் இது போன்ற சோதனைகளால், சோதனை முயற்சிகளால் பாதியில் முடிந்து விடக்கூடாது என்பதே அவர்களது பிரார்த்தனையாக உள்ளது.