Published : 20 Aug 2019 04:08 PM
Last Updated : 20 Aug 2019 04:08 PM

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸி. அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்

லண்டன்,

இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டத்தில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார்.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸரில் காயம் பட்டு ஸ்மித் சுருண்டு விழுந்தார். அந்த காயம் முழுமையாக குணமடையாததால், அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 1-0 என்றகணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. முதல் டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ச்சியாக இரு இன்னிங்ஸிலும் அடித்த (144, 142)சதம் அந்த அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது.

2-வது போட்டியிலும் 80 ரன்கள் சேர்த்த நிலையில்தான் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸர் வீச்சுக்கு ஸ்மித் இரையாகி கீழே சுருண்டு விழுந்தார். ஏறக்குறைய 40 நிமிடங்கள் ஓய்வுக்குப்பின் மீண்டும் ஸ்மித் விளையாட வந்தபோதிலும், பவுன்ஸர் பயத்திலேயே சிறிதுநேரத்தில் வெளியேறினார்.

டெஸ்ட் போட்டியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விதியான காயம் அடைந்த வீரருக்கு பதிலாக மாற்றுவீரரை பேட்டிங் செய்யலாம் என்ற அடிப்படையில் ஸ்மித்தின் காயம் மருத்துவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. அவருக்கு காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதாலும் தலைவலி, கழுத்துவலி இருப்பதாலும் அவருக்கு பதிலாக லபுஷேன் சேர்க்கப்பட்டார்.

ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் லபுஷேன் ஹெல்மெட் வலைக்குள் பந்துபட்டு நாடிப்பகுதியில் அடிவாங்கினாலும் தொடர்ந்து ஆடி அரைசதம் எடுத்து ட்ராவை உறுதி செய்தார். இரு தரப்பு அணிகளின் பந்துவீச்சாளர்களும் பவுன்ஸர்களை வீசியதால், 2-வது போட்டி ப பரபரப்புக்கு மத்தியில் டிராவில் முடிந்தது.

இந்த சூழலில் ஹெடிங்லியில் 3-வது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது. ஸ்மி்த்துக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பேட்டிங் வரிசையில் தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் இல்லாதது பெரும் பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x