Published : 20 Aug 2019 03:21 PM
Last Updated : 20 Aug 2019 03:21 PM

ஜோப்ரா ஆர்ச்சர் லார்ட்ஸில் அதிக ஓவர்களை வீசினாரா? மே.இ.தீவுகளுக்கு எதிராக கபில் தேவ் வீசிய வெறித்தனம் போல் வருமா?

நடந்து முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட், இங்கிலாந்தில் மறு அவதாரம் எடுத்துள்ளாரா மால்கம் மார்ஷல் என்று திகைக்க வைக்கும் பந்து வீச்சை வீசிய, ஜோப்ரா ஆர்ச்சருக்கு உரித்தானது.

ஜோப்ரா ஆர்ச்சரின் லைன் மற்றும் லெந்த்தை முழுதும் ஆதிக்கம் செய்யும் பேட்ஸ்மென்கள் இனிவர கொஞ்சம் காலம்பிடிக்கும் என்றே தெரிகிறது. ஆனால் அவரை அதிக ஓவர்களை ஜோ ரூட் வீச வைத்தார் என்று வர்ணனையாளர்கள் உட்பட அனைவரும் கவலை தெரிவித்தனர். அதாவது மைக்கேல் கிளார்க் ஆஸி. கேப்டனாக இருந்த போது ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சனை மிகப்பிரமாதமாக பயன்படுத்தியது அதிவேக ஸ்ட்ரைக் பவுலர்களை ஒரு கேப்டன் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சிறந்த கிரிக்கெட் பாடமாகும். சிறு சிறு ஸ்பெல்களாக ஜான்சனை அவர் பயன்படுத்தினார், 5 அல்லது 6 ஓவர்கள்தான் அவர் ஒரு ஸ்பெல்லில் வீசுவார், இடையில் 3 ஓவர் ஸ்பெல் கூட அவர் வீச வைக்கப்பட்டார், அந்தத் தொடரில்தான் ஜான்சன் அதிக விக்கெடுட்டுகளைக் கைப்பற்றியதோடு இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் உட்பட பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்வும் முடிவுக்கு வந்தது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் நடந்து முடிந்த ஆஷஸ், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 94 ஓவர்களில் 29 ஓவர்களையும், 2வது இன்னிங்சில் 47 ஓவர்களில் 15 ஓவர்களையும் வீசி மொத்தம் 44 ஓவர்களை வீசினார். இது அறிமுகமாகி முதல் டெஸ்ட்டில் ஆடும் ஒரு வீச்சாளர் வீசக்கூடியதுதான்.

ஆனால் 1983 உலகக்கோப்பை முடிந்து மே.இ.தீவுகள் கடும் ஆவேசத்துடன் இந்திய அணியை காலி செய்யும் முடிவுடன் இந்தியாவுக்கு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆட வந்த போது அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கபில் தேவ் வீசிய ஒரு பந்து வீச்சு மே.இ.தீவுகளின் பவர் பேட்டிங் வரிசையையே என்ன சேதி என்று கேட்க வைத்தது, இன்று சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் வெற்றி பெறுவதனால் ஊடகங்கள் பெரிதாக்கும் போது தோல்வியடைந்த ஒரு டெஸ்ட் போட்டியில் அதுவும் கிளைவ் லாய்ட் தலைமையிலான மே.இ.தீவுகள் அணி பேட்டிங் வரிசைக்கு எதிராக கபில்தேவ் 2வது இன்னிங்சில் வீசிய ஒரு பந்து வீச்சு உலக அளவில் பெரிய பந்து வீச்சு என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.

ஆனால் அது பெரிய அளவில் கவன ஈர்ப்பு பெறவில்லை. கபில்தேவ் அந்த இன்னிங்சில் கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ், ரிச்சர்ட்ஸ், கோம்ஸ், லாய்ட், கஸ் லோகி, டியூஜான், மார்ஷல் அடங்கிய பேட்டிங் வரிசைக்கு எதிராக 30.3 ஓவர்களைத் தொடர்ச்சியாக வீசிய அந்த உடல், மனோ சக்தியை என்னவென்று நாம் வர்ணிப்பது. மேகமூட்ட வானிலையில் பந்து வீச்சுக்கு சாதக ஆட்டக்களங்களில் வீசும் அந்த பவுலிங்குகளையே பெரிதாகப் பேசிக்கொண்டிருந்தால் கபில்தேவ் 1983, நவ.12-16 இடையே நடந்த அகமதாபாத்தில் வெயிலில் வீசிய பவுலிங்கை என்னவென்று கூறுவது?

30.3 ஒவர் தொடர்ச்சியாக வீசியது பெரிதல்ல 30.3 ஓவர்கள் 6 மெய்டன் 83 ரன்கள் 9 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றி மே.இ.தீவுகளை 201 ரன்களுக்குச் சுருட்டியதை என்னவென்று கூறுவது? அதுவும் மைக்கேல் ஹோல்டிங் இறங்கி கடைசியில் ‘காடா’ பேட்டிங் செய்து 58 எடுக்கவில்லை என்றால் மே.இ.தீவுகள் 150 ரன்களுக்கு மடிந்திருக்கும். வெற்றி பெற 201 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 103 ரன்களுக்குச் சுருண்டது வேறு கதை. ஒரேயொரு சுனில் கவாஸ்கரை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

முதல் இன்னிங்சில் மே.இ.தீவுகள் 281 ரன்களுக்குச் சுருண்டது. டியூஜான் அதிகபட்சமாக 98 எடுத்தார். இந்தியத் தரப்பில் ராஜர் பின்னி 3 விக்கெட்டுகளையும் மணீந்தர் சிங் 4 விக்கெட்டுகளையும் கபில்தேவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 241 ரன்களுக்குச் சுருண்டது. இதில் இன்று கவாஸ்கரை வரலாறு தெரியாமல் திட்டித் தீர்க்கும் இன்றைய ரசிகர்களுக்குத் தெரியாத விஷயம் என்னவெனில் 120 பந்துகளில் கவாஸ்கர் 90 ரன்களை 13 பவுண்டரிகளுடன் 75% ஸ்டரைக் ரேட்டுடன் எடுத்தார். ஹெல்மெட் கிடையாது, பவுலர்களோ மார்ஷல், ஹோல்டிங், வைன் டேனியல், வின்ஸ்டன் டேவிஸ், சேவாக் ரக இன்னிங்சை ஆடினார் சுனில் கவாஸ்கர் ஆனால் கெய்க்வாட் 39 ரன்களையும் கபில்தேவ் 31 ரன்களையும் எடுக்க இந்திய அணி 241 ரன்களுக்குச் சுருண்டது. வெய்ன் டேனியல் 5 விக்கெட்டுகள்.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி கபில் தேவிடம் இத்தகைய வெறித்தனமான பந்து வீச்சை சற்றும் எதிர்பார்க்கவில்லை. டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் மட்டுமே பல்வீந்தர் சாந்துவிடம் ஆட்டமிழந்தார், மீதி 9 விக்கெட்டுகளையும் கபில்தேவ் கைப்பற்றினார், அதுவும் தொடர்ச்சியாக 30.3 ஒவர்களை அயர்ச்சி எதுவும் இல்லாமல் வேகத்தையும் ஆக்ரோஷத்தையும் குறைக்காமல் வீசியுள்ளார். பிட்சில் ஒருமுனையில் கொஞ்சம் உதவி இருந்தது, ஷார்ட் லெக் வைத்துக் கொண்டு கபில் வீசிய அந்த 9/83 ஸ்பெல் அவரது உலகக்கோப்பை 175 ரன்களுடன் சமமாக வைத்துப் பேசப்பட வேண்டிய ஒரு பந்து வீச்சு, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனை வேகப்பந்து வீச்சை இனி யாராவது முறியடிக்க வேண்டுமெனில் கபில் அளவுக்கு வெறியும், வேகமும், அதனுடன் விவேகமும், களவியூகத் திறமை கொண்ட ஒரு அட்டாக்கிங் கேப்டனும் தேவை.

இந்தத் தொடரில் கபிலே கேப்டன் என்பதால் அவருக்கு இந்தப் பிரச்சினையில்லை. 201 ரன்களுக்குச் சுருட்டப்பட்டது மே.இ.தீவுகள். கபில் 30.3-6-83-9. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 47.1 ஒவரில் 103 ஆல் அவுட். கவாஸ்கர் 4 ரன்களில் ஹோல்டிங் பந்தில் எல்.பி.ஆனவுடனேயே அடுத்து கபில்தேவை மட்டுமே நம்ப வேண்டிய சூழ்நிலை. 138 ரன்களில் இந்தியா தோல்வி. ஆனால் உலகில் சகலவிதங்களிலும் வலுவான ஒரு அணிக்கு எதிராக தனிநபராக கபில் தேவ் அன்று வீசிய பந்து வீச்சு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது என்றால் மிகையாகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x