Published : 20 Aug 2019 02:50 PM
Last Updated : 20 Aug 2019 02:50 PM

இது 'சாம்பிள்'தான், ஆர்ச்சரின் பவுன்ஸர் அம்புகள் இன்னும் இருக்கு: ஆஸி.க்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை

லண்டன்,

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரிடம் இருந்து அடுத்துவரும் டெஸ்ட் போட்டிகளில் ஏராளமான பவுன்ஸர்கள் வரும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.

லண்டனில் நடந்த ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகமாகினார். களமிறங்கிய முதல்போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மணிக்கு 95 மைல் வேகத்தில் ஆர்ச்சர் வீசி பந்துகள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கதிகலங்கச் செய்தது. குறிப்பாக 4-வது நாளில் ஆர்ச்சர் வீசிய பவுன்ஸரில் ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை பந்து தாக்கியதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார்.

அவருக்கு பதிலாக மாற்றுவீரராக களமிறக்கப்பட்ட லாபுசாங்கேவும் பவுன்ஸரில் அடிவாங்கினார். ஆர்சசர் வீசிய பந்தில் ஹெல்மெட் வலைக்குள் பந்து சென்று நாடிப்பகுதியில் அடிவாங்கினார். இந்த போட்டி டிராவில் முடிந்தாலும் ஆர்ச்சரின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தது. இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

பவுன்ஸரில் சுருன்டுவிழுந்த ஸ்மித் : கோப்புப்படம்

அதேசமயம், ஸ்டீவ் ஸ்மித் பந்துதாக்கப்பட்டு கீழே விழுந்தபோது, அவரை ஓடிவந்து நலம்விசாரிக்காமல் சிரித்த ஆர்ச்சரின் செயல்பாடுகளையும் முன்னாள் வீரர்கள் பலரும், ஆஸ்திரேலிய வாரியமும் கண்டித்துள்ளது.

இந்த சூழலில் வரும் வியாழக்கிழமை ஹெடிங்கிலியில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் லண்டனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சிலும், பவுன்ஸரிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பார்த்தது ஒரு பகுதிதான். ஏராளமானவற்றை பார்க்க வேண்டியது இருக்கிறது. இன்னும் ஆக்ரோஷமாக, ஆவேசமாக வரும் பவுன்ஸர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள வேண்டும். யாரும் களத்தில் நிலைத்து நின்று ஆட முடியாது.

சிலர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், பந்துவீச்சில் சில பேட்ஸ்மேன்கள் மோசமாக அடிவாங்கினார்கள் என்பதற்காத, எந்த பந்துவீச்சாளர்களும் இனிமேல் பந்துவீசப் போவதில்லை, யாரும் அடிவாங்குவதற்காக பந்துவீசவில்லை என்று கூறமாட்டார்கள்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் : கோப்புப்படம்

பந்துவீச்சில் ஒரு பேட்ஸ்மேனுக்கு அடிபட்டுவிட்டது என்றால் பந்துவீச்சாளருக்கு கவலை இருக்கும். ஆனால் அடிபட்ட பேட்ஸ்மேன் மீண்டும் அடுத்த பந்தை எதிர்கொண்டால் அப்போதும் பவுன்ஸர் வீசத்தான் வேண்டும்.

ஜோப்ராவின் பந்துவீச்சு சீராகத்தான் இருக்கும், விளையாட எளிதாக இருந்தாலும், பவுன்ஸராக வரும்போது பேட்ஸ்மேனை எதிர்நோக்கி மோசமாக வரும்.

எங்களின் பந்துவீச்சு தாக்குதலில் மற்றொரு பரிமாணத்தை ஆர்ச்சர் வெளிப்படுத்துகிறார். முதல் இன்னிங்ஸில் 29 ஓவர்கள்தான் ஆர்ச்சர் வீசினார். ஆனால், கடைசியாக வீசிய 8 ஓவர்கள் அவரின் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது. நான் கிரிக்கெட் விளையாட வந்ததில் இருந்து இதுபோன்ற பந்துவீச்சை பார்த்தது இல்லை.

ஆஸ்திரேலியாவின் மிட்ஷெல் ஜான்ஸன் இதுபோன்ற பந்துவீச்சை வெளிப்படுத்துவதை பார்த்திருக்கிறோம். குறிப்பாக 2013-ம்ஆண்டில் ஜான்ஸன் பந்துவீச்சில் இதுபோன்ற ஆக்ரோஷம் இருந்தது.

ஆனால், அதே ஆவேசமான பந்துவீச்சை ஜோப்ரா இப்போது எளிதாக வெளிப்படுத்துகிறார். ஆர்ச்சரிடம் இருப்பது அசாத்தியமான, மிரட்டும் விதமான திறமை. ஆர்ச்சரின் திறமைக்கு வானம்தான் எல்லை. இங்கிலாந்தின் டெஸ்ட் அணிக்கு நல்லதொரு தேர்வாக ஆர்ச்சர் இருக்கிறார். இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x