Published : 19 Aug 2019 05:05 PM
Last Updated : 19 Aug 2019 05:05 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசை:கோலியை நெருங்கும் ஸ்மித்: வில்லியம்ஸனை பின்னுக்கு தள்ளினார்

துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான ஸ்மித், முதலிடத்தில் உள்ள இந்தியக் கேப்டன் கோலியின் இடத்தை நெருங்கியுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்மித்தின் அபாரமான இரு சதங்கள், லாட்ஸ் மைதானத்தில் அடித்த 92 ரன்கள் ஆகியவை ஸ்டீவ் ஸ்மித்தை ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2-வது இடத்துக்கு உயர்த்தியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இன்னும் கோலியின் இடத்தைப் பிடிக்க ஸ்மித்துக்கு 9 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது.

ஆனால், வரும் 22-ம் தேதி முதல் மே.இ.தீவுகள் அணிக்குஎதிரான டெஸ்ட் தொடரில் இந்தியஅணி விளையாட இருப்பதால், கோலி தனது தரவரிசைப் புள்ளிகளை உயர்த்திக்கொள்வார் என நம்பப்படுகிறது.

நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 887 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த நிலையில் அவரை பின்னுக்குத் தள்ளி 913 புள்ளிகளுடன் ஸ்மித் 2-வது இடத்தில் உள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரி்ல் அறிமுகமாகிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 83-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மன் புஜாரா 881 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். அதன்பின் 10 இடங்களில் எந்த இந்திய பேட்ஸ்மேனும் இல்லை. 5-வது இடத்தில் ஹென்றி நிகோலஸ்(நியூஸி), 6-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மார்க்கிரம், 7-வது இடத்தில் குயின்டன் டீ காக் ஆகியோரும் உள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 122 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த இலங்கை கேப்டன் கருணாரத்னே முதல் 10 இடங்களில் இடம் பிடித்து 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். கடந்த 7 ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் கருணாரத்னேயின அதிகபட்ச தரவரிசை இதுவாகும். 9-வது இடத்தில் ஜோ ரூட்டும், 10-வது டூப்பிளசிஸ்ஸும் உள்ளனர்.

இதுதவிர ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 2 இடங்கள் முன்னேறி 18-வது இடத்துக்கும், மார்னஸ் லாபுசாங்கே 16 இடங்கள் உயர்ந்து 82-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பென் ஸ்டோக்ஸ் 6 இடங்கள் முன்னேறி 26-வது இடத்திலும், ஜானி பேர்ஸ்டோ 7 இடங்கள் முன்னேறி 30-வது இடத்திலும், ரோரி பர்ன்ஸ் 17 இடங்கள் உயர்ந்து64-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

ஆனால், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர் 4 இடங்கள் சரிந்து 11-வதுஇடத்திலும், உஸ்மான் கவாஜா, கேமரூன் பேன்கிராப்ட் ஆகியோர் 5 இடங்களையும் இழந்துள்ளனர்.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் 914 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் 5-வது இடத்தில் இந்திய ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவும், 10-வது இடத்தில் ரவிச்சந்திர அஸ்வினும் உள்ளனர்.
மற்றவகையில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x