

பாஸல்
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் மகளிர் பிரிவில் நட்சத்திர வீராங்கனைகளான இந்தியா வின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் களமிறங்கு கின்றனர். போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.
அதேவேளையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் வீழ்ந்து மீண்டும் ஒரு முறை தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை சிந்து தவறவிட்டிருந்தார். 24 வயதான சிந்து, கடந்த மாதம் இந்தோனேஷிய ஓபனில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய நிலையில் உலக சாம்பியன்ஷிப் தொடரை சந்திக்கிறார்.
சிந்துவுக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப் பட்டுள்ளது. இதனால் அவர், நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்க உள்ளார். இந்த சுற்றில் சிந்து, சீன தைபேவின் பை யூ போ அல்லது பல்கேரியாவின் லிண்டா ஜெட்சிரி யுடன் மோதுவார். இந்த சுற்றை கடக்கும் பட்சத்தில் 3-வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கையும், கால் இறுதியில் சீன தைபேவின் டாய் ஸூ யிங்கையும், அரை இறுதி யில் சகநாட்டைச் சேர்ந்த சாய்னா நெவாலை யும் சிந்து நேருக்கு நேர் சந்திக்கக் கூடும்.
முன்னாள் முதல் நிலை வீராங்கனையான சாய்னா நெவாலுக்கும் முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்டுள்ளது. 2-வது சுற்றில் அவர், சுவிட்சர்லாந்தின் சப்ரினா அல்லது நெதர்லாந்தின் சோரயாவுடன் மோதுவார். 3-வது சுற்றில் சாய்னா நெவால் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டையும், கால் இறுதியில் சீனாவின் சென் யு பெயி-யையும் சந்திக்கக்கூடும்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி காந்த் தனது முதல் சுற்றில் அயர்லாந்தின் நட் குயெனுடன் மோதுகிறார். கடந்த 22 மாதங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாத காந்த்துக்கு உலக சாம்பியன்ஷிப் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்ற இந்திய வீரர்களான சமீர் வர்மா சிங்கப்பூரின் லோஹ் கீனையும் சாய் பிரணீத் கனடாவின் ஜேசன் அந்தோனியையும், ஹெச்.எஸ்.பிரனோய் பின்லாந்தின் ஹெய்னோவையும் தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்கின்றனர். - பிடிஐ