Published : 18 Aug 2019 04:52 PM
Last Updated : 18 Aug 2019 04:52 PM

கோலிக்கு முதலிடம்: தோனி, சச்சினும்கூட அல்ல; சமூக ஊடங்களில் பின்தொடர்வோர் அதிகம் 

புதுடெல்லி,

சமூக ஊடகங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் கிரிக்கெட் வீரர்களில் கோலிதான் முதலிடத்தில் உள்ளார்.

அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் தோனிக்கு பின்தொடர்பவர்கள் அதிகம் இல்லை. ஆனால், கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், சச்சின் டெண்டுல்கர் கோலிக்கு அடுத்தாற்போல் மிகுந்த ஆக்டிவாக இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்கள் அடித்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஜொலித்து வருகிறார். அவரின் சாதனை கிரிக்கெட்உலகில் முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

விராட் கோலிக்கு ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றிலும் ஒவ்வொன்றிலும் 3 கோடிக்கும மேல் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.

மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்தில் உள்ளார். சச்சினுக்கு ட்விட்டரில் 3.1 கோடி ஆதரவாளர்களும், ஃபேஸ்புக்கில் 2.8 கோடி ஆதரவாளர்களும், இன்ஸ்டாகிராமில் 1.65 கோடி ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.

அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் தோனிக்கு சமூக ஊடகங்களில் அதிகமான ஃபாலோவர்ஸ் இல்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி, சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் அதிகமான உரையாடுவது இல்லை. இதனால், இன்ஸ்ட்கிராமில் தோனிக்கு 1.54 கோடி ஃபாலோவர்ஸும், ட்விட்டரில் 77 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 2.50 கோடி பேரும் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சமூக ஊடகங்களில் நன்கு ஆக்டிவாக இருந்து 4-வது இடத்தில் உள்ளார். ஹிட்மன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரோஹித் சர்மாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.50 கோடி பேரும், ட்விட்டரில் 1.47 கோடி பேரும், ஃபேஸ்புக்கில் 1.10 கோடி பேரும் ஆதரவாக இருக்கின்றனர்.

சமீபத்தில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்திய அணி வீரரும், சிஎஸ்கே அணி வீரருமான சுரேஷ் ரெய்னாவுக்கு ட்விட்டரில் 1.67 கோடி ரசிகர்களும், இன்ஸ்ட்கிராமில் 90ல ட்சம் ரசிகர்களும், ஃபேஸ்புக்கில் 31 லட்சம் ரசிகர்களும் இருக்கின்றனர். இவர் 5-வது இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் யுவராஜ் சிங்கை இன்னும் பின்பற்றுவோர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 6-வது இடத்தில் இருக்கும் யுவராஜ் சிங்கிற்கு ஃபேஸ்புக்கில் 1.40 கோடி ரசிகர்களும், ட்விட்டரில் 47 லட்சம் ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 75 லட்சம் ரசிகர்களும் இருக்கின்றனர்.

டர்பனேட்டர் எனச் சொல்லப்படும் ஹர்பஜன் சிங் 7-வது இடத்தில் உள்ளார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழிலும் ட்விட் செய்து ரசிகர்களை கிறங்க வைப்பார். ட்விட்டரில் ஹர்பஜன் சிங்கிற்கு ஆதரவாக 1.10 கோடி ரசிகர்களும், இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் ரசிகர்களும், ஃபேஸ்புக்கில் 66 லட்சம் ரசிகர்களும் ஆதரவாக இருக்கிறார்கள்.

அடுத்ததாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் உள்ளார். சர்வதேச அளவில் அதிகமாக விரும்பப்படும் வீரராக ட்வில்லியர்ஸ் இருந்து வருகிறார். 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்படும் டிவில்லியர்ஸுக்கு இன்ஸ்டாகிராமில் 85 லட்சம் பேரும், ட்விட்டரில் 67 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 36 லட்சம் பேரும் ஆதரவாக இருக்கின்றனர்.

9-வது இடத்தில் ஷிகர் தவண் உள்ளார். தவணுக்கு -ஃபேஸ்புக்கில் 89 லட்சம் ஆதரவாளர்களும்,ட்விட்டரில் 41 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 48 லட்சம் பேரும் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்

10-வது இடத்தில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் உள்ளார். யுனிவர்ஸல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயிலுக்கு பேஸ்புக்கில் 78 லட்சம் பேரும், ட்விட்டரில் 44 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 28 லட்சம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x