Published : 18 Aug 2019 02:51 PM
Last Updated : 18 Aug 2019 02:51 PM

கருணரத்னே அற்புத சதம்: நியூஸிலாந்தை வீழ்த்திய இலங்கை பெற்றது 60 வெற்றிப்புள்ளிகள்

காலே மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 60 வெற்றிப்புள்ளிகளைப் பெற்றது.

வெற்றி பெற தேவையான 268 ரன்களை 5ம் நாளான இன்று இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது. கேப்டன் கருணரத்னே 243 பந்துகளைச் சந்தித்து 6 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 122 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெற்றியை உறுதி செய்தார். திரிமானே 64 ரன்களை எடுக்க இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 161 ரன்களைச் சேர்த்தனர்.

கருணரத்னே கேப்டன்சியில் 3வது தொடர்ச்சியான வெற்றியாகும் இது. கருண ரத்னேவும் 23 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு தனது சதத்தை எடுத்தார், இது இவரது 9வது டெஸ்ட் சதமாகும்.

நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன்களை எடுக்க இலங்கை அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, மீண்டும் நியூசிலாந்து தன் 2வது இன்னிங்சில் வாட்லிங்கின் அபாரமான 77 ரன்களுடன் 285 ரன்களை எடுக்க இலங்கை வெற்றிக்குத் தேவை 268 ரன்கள் என்ற நிலையில் நேற்று இலங்கை 133/0 என்று அபாரமான தொடக்கத்தை அளித்தது.

இன்று களமிறங்கிய நிலையில் முதலில் திரிமானெ 64 ரன்களில் சோமர்வில் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். குசல் மெண்டிஸ் 10 ரன்களில் படேலிடம் ஆட்டமிழந்தார். கருணரத்னே 122 ரன்கள் எடுத்து டிம் சவுதியிடம் வெளியேறினார், குசல் பெரேரா போல்ட் பந்தில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு மேத்யூஸ் (28), டிஎம் டிசில்வா (14) ஆகியோர் வெற்றிய உறுதி செய்தனர்.

ஆட்ட நாயகனாக திமுத் கருணரத்னே தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x