Published : 18 Aug 2019 10:38 AM
Last Updated : 18 Aug 2019 10:38 AM

தமிழ் தலைவாஸ் வெற்றிதான் முக்கியம்: அணி வீரர் ஷப்பிர் பாபு பேட்டி

வா. சங்கர்

சென்னை

தனிப்பட்ட வீரர் ஒருவரின் சாதனையை விட அணியின் வெற்றிதான் எங்களுக்கு முக்கியம் என்று தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் ஷப்பிர் பாபு கூறினார்.

தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராகத் திகழ்பவர் ஷப்பிர் பாபு. யு மும்பா அணிக்காகவும் விளையாடி பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார். முதலாவது சீசனில் 66 புள்ளிகளைக் குவித்தவர். மேலும் 2017-18-ம் ஆண்டில் தேசிய சீனியர் கபடிப் போட்டியில் பங்கேற்ற கர்நாடகா அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றவர்.

தற்போது தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 6 ஆட்டங்களில் 13 முக்கிய புள்ளி களை எடுத்துள்ளார். மூத்த வீரரான இவர் ரைடர் பொறுப்பை ஏற்றுள் ளார். அவருடனான சந்திப்பில்...

நடப்பு சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடும்போது உங்களின் நிலை என்ன?

அணியின் மூத்த வீரர் அஜய் தாக்குர், ராகுல் சவுத்ரி உள்ளிட்ட மற்ற வீரர்களுடன் ஒருங்கிணைந்து ஆட்டத்தைக் கையாண்டு வரு கிறேன். எந்தப் போட்டிக்கும் முன்ன தாக கலந்தாலோசனை நடத்தி புள்ளிகளைக் குவிக்க முயன்று வருகிறோம்.

இந்த சீசனில் 2 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியைத் தழுவியது ஏன்?

இந்த முறை அனைத்து அணிகளுமே சம பலம் கொண்ட அணிகளாக இருக்கின்றன. தமிழ் தலைவாஸ் அணி தோல்வி கண்ட 2 போட்டிகளுமே மிகவும் சவாலாக இருந்தன. புள்ளிகள் வித்தியாசம் அதிகமாக இருந்தபோதிலும் கடைசி நேரத்தில் புள்ளிகளைக் குவித்து வெற்றிக்கு அருகில் வந்தோம். ஆனால் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி கண்டோம். வரும் போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பதற்கான முறைகளைக் கையாள்வோம்.

உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்பட்டுள்ளதா?

அப்படி சொல்ல முடியாது. அனைத்து அணிகளிலும் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டு வருகிறது. தமிழ் தலைவாஸ் அணியிலும் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என பயிற்சியாளர் இ. பாஸ்கரன் உறுதி அளித்துள்ளார். சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் உள் ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப் படும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த சீசனில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

நடப்பு சீசனில் எந்த அணி பட்டம் வெல்லும் என்று இப்போதே கூற முடியாது. ஏனெனில் ஒவ்வொரு அணியும் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன. மேலும் அனைத்து அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இருக்கின்றனர். அணிகள் சமபலத்துடன் இருப்ப தால் வெற்றி வாய்ப்பு, சாம்பியன் ஷிப் வாய்ப்பு குறித்து இப்போது சொல்ல இயலாது.

அணி வீரர்களுக்கு உடற்தகுதி போன்ற பிரச்சினைகள் உள்ளதா?

இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அனைவரும் நல்ல உடற்தகுதியுடன் போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

கபடியில் தனிப்பட்ட வீரரின் சாதனை முக்கியமா?

கபடி போட்டிகளில் தனிப்பட்ட வீரரின் சாதனையை விட அதனால் தனிப்பட்ட முறையில் புள்ளிகள் எடுக்க அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை

யார் எவ்வளவு புள்ளி எடுத்தா லும் அது அணிக்காக எடுக்கப்பட்ட புள்ளிகள் தான். எப்போதும் அணி வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தான் நாங்கள் விளையாடி வருகிறோம். சில நேரங்களில் அந்த முயற்சி பலனளிக்காமல் போய் விடுகிறது

சென்னை ரசிகர்களின் ஆதரவு எப்படி?

எப்போது சென்னை ரசிகர்கள் தமிழ் தலைவாஸ் அணிக்கு அதிக ஆதரவு அளித்து வருகின்றனர். சென்னையில் 4 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான முயற்சி களைச் செய்வோம். சென்னை ரசிகர்களின் உற்சாகமாக ஆதரவு எங்களுக்கு மேலும் கூடுதல் நம்பிக்கையைத் தருகிறது.

பயிற்சியாளர் பாஸ்கரனுடன் வீரர்களின் ஒருங்கிணைப்பு எந்தவிதம் இருக்கிறது?

அணியின் வெற்றிக்காக பயிற்சியாளர் பாஸ்கரன் அதிக முக்கியத்துவம் தந்து எங்கள் உற்சாகப்படுத்துகிறார். அவரின் வழிகாட்டுதலுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக அந்த அணியின் பலம், பலவீனம் குறித்து ஆலோசிக்கப்படுமா?

நிச்சயமாக ஒவ்வொரு போட்டியின்போது எதிரணியின் பலம், பலவீனம் குறித்து ஆலோசனை நடத்துவோம். அதற்கேற்ப களமிறங்குவோம்.

முதல் போட்டியில் தோல்வி

சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 21-32 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டது.

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் ஹைதராபாதில் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு முக்கிய நகரங்களில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியின் சென்னை லீக் ஆட்டங்கள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கின. ஹைதராபாதில் தொடங்கிய இப்போட்டி மும்பை, பாட்னா, அகமதாபாத் நகரங்களைத் தொடர்ந்து சென்னைக்கு வந்துள்ளது. சென்னை லீக் போட்டிகளுக்குப் பின்னர் டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், பஞ்ச்குலா, நொய்டா ஆகிய இடங்களில் இப்போட்டியின் லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x