Published : 17 Aug 2019 07:40 PM
Last Updated : 17 Aug 2019 07:40 PM

ஜோப்ரா ஆர்ச்சர் பவுன்சரில் கழுத்தில் அடி வாங்கி நிலைகுலைந்து கீழே விழுந்த ஸ்மித்: பெவிலியன் திரும்பினார்

ஆர்ச்சர் பவுன்சரில் அடி வாங்கி நிலைகுலைந்து விழுந்த ஸ்மித். | லார்ட்ஸ் டெஸ்ட் 2019, 4ம் நாள். | ஏஎப்பி.

ஆஷஸ் 2வது டெஸ்ட் 4ம் நாளான இன்று லார்ட்சில் இங்கிலாந்துக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வரும் ஸ்டீவ் ஸ்மித்தும், இளம் வேகப்புயல் ஜோப்ரா ஆர்ச்சரும் அபாரமான ஒரு சவால் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கடைசியில் ஸ்மித் அடி வாங்கி காயம் காரணமாக ‘ரிட்டையர்ட்’ ஆகி பெவிலியன் திரும்ப நேரிட்டது.

ஸ்மித் 80 ரன்களில் ரிட்டையர்ட் ஆகி வெளியேற ஆஸ்திரேலியா தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

பீட்டர் சிடில், கமின்ச் ஆடுகின்றனர்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆர்ச்சரை ஒருவழியாக கையாண்டு விக்கெட்டை இழக்காமல் இருந்த ஸ்மித், அதன் பிறகு ஷார்ட் பிட்ச் சவாலுக்கு உட்படுத்தப்பட்டார், ஒரு பந்து ஸ்மித்தின் முழங்கையை பதம் பார்க்க மைதானத்துக்கு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்து பிளாஸ்டருடன் ஸ்மித் மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆனாலும் அவர் கொஞ்சம் அசவுகரியப்பட்டார் என்பது தெரிந்தது.

இந்நிலையில் இன்னிங்சின் 77வது ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சரின் முதல் ஷார்ட் பிட்ச் பந்தை வெற்றிகரமாக புல்ஷாட் ஆடி பவுண்டரிக்கு அனுப்பினார்.

ஆனால் அடுத்த பந்து கண்ட படி வேகமாக வந்து எழும்ப ஸ்மித் தன் கழுத்தை வலது புறமாகத் திருப்ப ஹெல்மெட் பாதுகாப்பில்லாத பகுதியில் பந்து வேகமாகத் தாக்கியது. நிலைகுலைந்த ஸ்மித் கீழே மல்லாக்க சாய்ந்தார் அவருக்கு கடும் வலி இருந்தது தெரிந்தது.

பிறகு எழுந்து நின்றார், மருத்துவர்கள் அதற்குள் வந்து முதலுதவி அளிக்க அவர்களுடன் பேசினார், பிறகு பெவிலியன் நோக்கி நடந்தார். 80 ரன்களில் அவர் காயம் காரணமாக வெளியேறினார்.

அவருக்கு சில பரிசோதனைகள் உடனடியாகத் தேவைப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. லார்ட்ஸ் ரசிகர்கள் கரகோஷத்துடன் அவர் பெவிலியன் சென்றார். ஆர்ச்சர் அதிக ஓவர்களை வீசி வருகிறார்.

பிலிப் ஹியூஸ் உயிரைப் பலிவாங்கிய ஷார்ட் பிட்ச் பந்து எந்தப் பகுதியைத் தாக்கியதோ அதே பகுதியைத்தான் ஸ்மித்தையும் இப்போது தாக்கியது. இங்கிலாந்து வீரர்கள் பதற்றமடைந்தனர்.

புதிய கன்கஷன் விதிகளின் படி ஸ்மித் களமிறங்க முடியவில்லை எனில் இன்னொரு பேட்ஸ்மெனை களமிறக்கிக் கொள்ளலாம், ஆனால் ஸ்மித் ஆட்டத்தை தொடரவே விரும்பினார், பிறகு மருத்துவர்களின் ஆலோசனைக்கிணங்க அவர் பெவிலியன் சென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x