

ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது என்பதை இங்கிலாந்து பவுலர்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. லார்ட்ஸ் டெஸ்ட் 4ம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கண்டார்.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தின் 258 ரன்களை எதிர்த்து முதல் இன்னிங்ஸில் 4ம் நாள் உணவு இடைவேளையின் போது 155 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 122 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தும் கேப்டன் பெய்ன் 21 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.
இருவரும் சேர்ந்து இதுவரை 6வது விக்கெட்டுக்காக 53 ரன்களைச் சேர்த்துள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சருக்கும் ஸ்மித் ‘பெப்பே’ காட்டியுள்ளார்.
நேற்று ஸ்மித் இறங்குவதற்கு முன்னரே ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஏகப்பட்ட ஓவர்களை கொடுத்து அவரை களைப்படையச் செய்து விட்டார் ஜோ ரூட், வந்தவுடன் இளம் வேகத்திடம் கொடுத்திருந்தால் ஸ்மித் ஒருவேளை ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்து ஆட்டமிழந்திருக்க வாய்ப்புண்டு, ஆனால் ஜோ ரூட் செய்த இந்தத் தவறினால் அவர் அந்தத் தடையிலிருந்து தவிர்க்கப்பட்டு மற்ற வீச்சாளர்களை தன் வழக்கமான பாணியில் ஆடிவிட்டார் ஸ்மித்.
ஆஃப் ஸ்பின்னர் ஜாக் லீச்சையும் மிகவும் பின்னால் கொண்டு வந்தார் ஜோ ரூட், நன்றாக செட்டில் ஆகிவிட்ட ஸ்மித் இவர் பந்தை மேலேறி வந்து தூக்கி மிட்விக்கெடில் பவுண்டரி அடித்து தன் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவரது 25வது அரைசதமாகும் இது.
இன்று காலை மேத்யூ வேட் 6 ரன்களில் பிராட் பந்தை தொட்டார் கெட்டார், ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதற்காக பிராட் அவரை ஒர்க் அவுட் செய்து வீழ்த்தினார். ஜோப்ரா ஆர்ச்சர் 21 ஓவர் 9 மெய்டன் 28 ரன்கள் என்று டைட்டாக வீசியதோடு அபாயகரமாகவும் வீசினார். பிராட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஜோ ரூட்டின் பந்து வீச்சு மாற்றங்களும் களவியூகமும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு நெருக்கடி அளிப்பதாக இல்லை என்பதே அவர் மீதான விமர்சனமாக இருந்து வருகிறது.
4ம் நாள் ஆட்டம் என்பதால் ஆட்டம் ட்ரா நோக்கியே செல்கிறது என்று கொண்டாலும் ஆஸ்திரேலியா நிச்சயம் அப்படி விட்டு விடாது, மேலும் மழைபெய்யாமல் இருந்தால் இன்று இன்னும் 71 ஓவர்கள் மீதமிருக்கையில் சுமார் 60-65 ஓவர்களை ஆஸ்திரேலியா ஆடினாலும் ஓவருக்கு 3 ரன்கள் வீதத்தில் அடித்தாலும் 180-185 ரன்களை மேலும் சேர்க்க முடிந்தால் ஸ்கோர் 340 ரன்களை எட்ட வாய்ப்புள்ளது. 80 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து பேட்ஸ்மென்களை நோக்கி ஆஸி. மீண்டும் பவுன்சர் தாக்குதல் நடத்தி அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது
இப்படி நடக்கக் கூடாது என்றால் ஸ்டீவ் ஸ்மித்தை விரைவில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 240 ரன்களுக்குள் இங்கிலாந்து மடக்க வேண்டும் .