

கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி கோப்பையை வென்று வரலாறு படைத்தது சிலி. 99 ஆண்டு கால கோபா அமெரிக்க கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்றுள்ளது. மேலும், இத்தொடரில் இதுவரை அர்ஜென்டீனாவை வென்றதில்லை என்ற அவப்பெயரையும் துடைத்தெறிந்தது சிலி.
தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் பிரபல கால்பந்துப் போட்டியான கோபா அமெரிக்கா தொடர் சிலியில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி சாண்டியாகோவில் நேற்று நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு 15-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் அர்ஜென்டினாவும், முதன்முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சிலியும் களமிறங்கின.
இரு அணிகளும் ஆட்டத்தைத் தொடங்கியது முதலே ரசிகர்களின் ஆரவாரம் அளவில்லாததாக இருந்து. இரு அணிகளும் மிகக் கவனமாக ஆடியதால் முதல் பாதியில் கோல் எதுவும் விழ வில்லை. 11-வது நிமிடத்தில் சிலியின் விடால் கோலடிக்கும் முயற்சியை அர்ஜென்டினா கோல் கீப்பர் ரொமாரியோ அற்புதமாக தடுத்து விட்டார். 20-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் அகுவெரோவின் கோலடிக்கும் முயற்சியை சிலி கோல்கீப்பர் பிராவோ தடுத்து விட்டார்.
ஆட்டத்தின் இரண்டாம் பகுதியிலும் இரு அணிகளின் கோலடிக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மாயம் நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
இரு அணிகளின் தடுப்பாட்டமும் கோலடிக்கும் வாய்ப்புகளை தகர்த்து விட்டன. இருப்பினும் சிலியின் அலெக்ஸிஸ் ஆட்டத் தின் 83-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவை கொஞ்சம் பயமுறுத்தி விட்டார். அவரின் கோலடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்தப்போட்டியில் மொத்தம் 7 மஞ்சள் அட்டை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
கூடுதல் நேரத்திலும் கோல்கள் எதுவும் விழவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 0-0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன.
பெனால்டி ஷூட் அவுட்
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. சிலி முதலில் வாய்ப்பைப் பெற்றது. அந்த அணியின் பெர்னான்டஸ் முதல் வாய்ப்பை கோலாக மாற்றினார். அர்ஜென்டினாவின் முதல் வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். இதுதான் அந்த அணி சார்பில் அடிக்கப்பட்ட ஒரே கோல்.
2-வது வாய்ப்பை சிலியின் விடால் சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார். ஆனால், அர்ஜென்டினாவின் ஹுகுவெய்ன் கோல் கம்பத்தை விட மிக உயரமாக பந்தைத் தூக்கி அடித்து அர்ஜென்டினாவின் பின்னடைவுக்கு வித்திட்டார்.
சிலியின் அரான்குய்ஸ் தனது அணிக்கான 3-வது வாய்ப்பை கோலாக்கினார். அர்ஜென்டினா பதற்றத்துடன் 3-வது வாய்ப்பை எதிர்கொண்டது. பனேகா அடித்த பந்து நேராக சிலி கோல்கீப்பர் பிராவோவை நோக்கிச் சென்றது. அவர் அதை அநாசயமாக தடுக்க அரங்கம் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது.
அடுத்து சிலியின் வாய்ப்பு. அலெக்ஸிஸ் சான்செஸ் அற்புதமாக வெற்றிக்கான கோலை அடிக்க, சிலி வரலாறு படைத்தது. முதன்முறையாக கோப்பையை வென்றது சிலி. கோபா அமெரிக்கா தொடரில் 173 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சிலி தற்போதுதான் கோப்பையை வென்றுள்ளது. மேலும், இத்தொடர்களில் இதுவரை அர்ஜென்டினாவை வென்றதில்லை என்ற அவப்பெயரையும் துடைத் தெறிந்தது. சிலி கோல்கீப்பர் கிளாடியோ பிராவோவுக்கு கோல்டன் கிளவ் விருது வழங்கப்பட்டது.
துரதிருஷ்டம்
கடந்த 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் தோற்றது அர்ஜென் டினா. தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கோபா அமெரிக்கா போட்டியில் கோப்பையை இழந் துள்ளது. மிக முக்கியமான போட்டிகளில் அர்ஜென்டினா வுக்காக மெஸ்ஸி சோபித்த தில்லை என்ற விமர்சனம் இந்தப் போட்டியைப் பொறுத்தவரை உண்மையாகிப்போனது.
ஆனால், மெஸ்ஸியைத் தவிர, அர்ஜென்டினாவில் மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி பந்து களைக் கடத்தவில்லை. கோப்பை யை இழந்த சோகத்துடன் வெளி யேறியது அர்ஜென்டினா.