

மும்பை, பிடிஐ
கேப்டன் விராட் கோலி விரும்புகிறார் என்பதற்காக ரவி சாஸ்திரியை மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கவில்லை, சாஸ்திரியின் மொழிப்பரிமாற்றத் திறன் மற்றவர்களை விட சிறப்பாக உள்ளதே மீண்டும் அவர் நியமிக்கப்பட்டதற்குக் காரணம் என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோலி செல்வாக்கினால் தேர்வா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்குக் கபில்தேவ், “இல்லவே இல்லை.. கோலியின் கருத்தை கேட்க வேண்டுமெனில் ஒட்டுமொத்த அணியையுமே கேட்க வேண்டும். நாங்கள் யாரையும் கேட்கவில்லை. அதற்கு இங்கு இடமில்லை” என்றார்.
2015, 2019 உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதியுடன் இந்தியா இவரது பயிற்சி காலத்தில்தான் வெளியேறி உள்ளதே என்ற கேள்விக்கு, “உலகக்கோப்பை வெல்லவில்லை என்பதற்காக எந்த அணியின் மேலாளர், பயிற்சியாளரை நீக்க முடியுமா? நீக்க வேண்டுமா? ஒட்டுமொத்தமாக நீங்கள் பார்க்க வேண்டும். அவர் எங்களிடம் எப்படி விஷயங்களை அளித்தார் என்பதை வைத்தே முடிவெடுத்தோம்” என்றார் கபில்தேவ்.
“நேர்காணல் செய்த அனைவருமே பிரமாதம்தான். ஆனால் சாஸ்திரியிடம் நல்ல கம்யூனிகேஷன் திறமைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். நேர்காணலில் அவர்கள் தொகுத்தளித்த விதங்களை வைத்து மதிப்பெண் வழங்கி தேர்வு செய்துள்ளோம்” என்றார் கபில்தேவ்.