வி.பி.சந்திரசேகர் மரணம்: தற்கொலையா என சந்தேகம்
இந்திய, தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் திடீரென மரணமடைந்ததையடுத்து முதலில் மாரடைப்பு என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது போலீஸார் அவரது மரணம் இயற்கை மரணம் அல்ல தற்கொலை என்று சந்தேகம் எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சில தரப்பு செய்திகள் கூறுகின்றன.
கடைசியாக நேற்று மாலை 5.45 மணியளவில் தன் வீட்டில் மனைவியுடன் தேநீர் அருந்தியதாகவும், அதன் பிறகு தன் அறைக்குச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவர் மனைவி கதவைத் தட்டிய போது உள்ளிருந்து பதில் வரவில்லை என்றும் அதன் பிறகு அண்டை வீட்டார்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, மைலாப்பூர் போலீஸ் நிலையம் சந்தேக மரணம் என்பதாக வழக்குப் பதிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக வந்த செய்தியில், கடன் தொல்லைகளினால் அவர் தற்கொலை செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான குறிப்பு எதுவும் காணப்படவில்லை என்று போலீஸ் தரப்பு கூறுவதாக ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.
