Last Updated : 28 Jul, 2015 04:46 PM

 

Published : 28 Jul 2015 04:46 PM
Last Updated : 28 Jul 2015 04:46 PM

ஆஷஸ் தொடருக்கு மந்தமான ஆட்டக்களம் தயாரிக்க உத்தரவு: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மறுப்பு

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆக்ரோஷத்தை குறைக்க நடப்பு ஆஷஸ் தொடரில் மந்தமான, பந்துகள் எழும்பாத, மெதுவாக மட்டைக்கு வருமாறான ஆட்டக்களங்களை அளிக்குமாறு பிட்ச் தயாரிப்பாளர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை கேட்டுக் கொண்டதாக எழுந்த செய்திகளை இயக்குநரும் முன்னாள் கேப்டனுமான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மறுத்துள்ளார்.

புதன் கிழமை எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், பிட்சில் இப்போதைக்கு கொஞ்சம் பசும்புல் விட்டுவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாளை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதனை கடுமையாக மறுத்தார் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்.

முதல் டெஸ்ட் போட்டியில் இத்தகைய மந்த பிட்சில் வென்ற இங்கிலாந்து, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலும் இதே உத்தியைக் கடைபிடித்தது. ஆனால் டாஸில் தோற்றதால் மந்தமான பிட்சில் ஆண்டர்சன், பிராட், மார்க் உட் ஆகியோரது பவுலிங் எடுபடாமல் போக ஆஸ்திரேலியா பெரிய அளவுக்கு ரன்களைக் குவித்து இங்கிலாந்தை நெருக்கியது. 2-வது இன்னிங்ஸில் ஜான்சனின் ஆக்ரோஷமான ஷாட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள முடியாமல் 103 ரன்களுக்கு சுருண்டு மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது இங்கிலாந்து.

இதனையடுத்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ், இம்மாதிரியான மந்தமான, பேட்டிங் சாதக ஆட்டக்களங்களை இடுவது, ஆஸ்திரேலியாவின் வலையில் போய் விழுவதற்கு சமம் என்று விமர்சித்திருந்தார். பாய்காட், ஆண்டி லாய்ட், மைக்கேல் வான், ஆர்த்தர்டன் ஆகிய முன்னாள் வீரர்களும் இங்கிலாந்து பிட்ச்களின் இத்தகைய தயாரிப்புகள் மீது கடும் விமர்சனங்களை வைத்தனர்.

இந்நிலையில், எட்ஜ்பாஸ்டனில் நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் குறித்து கூறிய மைக்கேல் கிளார்க், “இப்போது வரை பிட்சில் 9மிமீ புல் உள்ளது. பார்த்தால் பிரிஸ்பன் ஷெபீல்ட் ஷீல்ட் போட்டி பிட்ச் போன்று உள்ளது.

இங்கிலாந்தில் நான் பார்த்த அளவில் இது அதிக புல்தரை பிட்ச் ஆகும். ஊடகங்களும், வர்ணனையாளர்களும் பேசியது பிட்ச் தயாரிப்பாளர்களையும் சற்றே பாதித்துள்ளது போல் தெரிகிறது.

இப்போது இருப்பது போல் போட்டி தொடங்கும் போதும் புல் இருந்தால் டாஸ் வென்று நிச்சயம் முதலில் பவுலிங் செய்வேன், ஆனால் இந்தப் புல்தரை இப்படியே விட்டுவிடப் படாது என்றே நான் கருதுகிறேன்” என்றார்.

மிட்செல் ஜான்சன் 300 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் ஒரேயொரு விக்கெட் மீதமுள்ளது.

300 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 5-வது ஆஸ்திரேலிய பவுலர் ஆவார் மிட்செல் ஜான்சன். 68 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி 299 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்ன் 708, கிளென் மெக்ரா 563, டெனிஸ் லில்லி 355, பிரெட் லீ 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x