Published : 15 Aug 2019 07:56 am

Updated : 15 Aug 2019 08:01 am

 

Published : 15 Aug 2019 07:56 AM
Last Updated : 15 Aug 2019 08:01 AM

கேட்சை விட்ட பிறகு கோலியின் ‘மாஸ்டர்ஃபுல்’ சதம் (43), மீண்டும் ஷ்ரேயாஸுடன் கூட்டணி: தொடரை வென்றது இந்திய அணி

kohli-dropped-on-11-ensures-victory-by-his-43rd-odi-ton

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட 35 ஒவர்களாகக் குறைக்கப்பட்டு அதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய கெய்ல், எவின் லூயிஸ் இந்திய வேகப்பந்து வீச்சை புரட்டி எடுத்தனர் 11 ஓவர்களுக்குள் ஸ்கோர் 115 ரன்கள் விளாசப்பட்டது. ஆனால் லூயிஸ், கெய்ல் கூட்டணி 5 பந்துகள் இடைவெளியில் பிரிய (நன்றி சாஹல், கலீல்) மே.இ.தீவுகள் கட்டிப்போடப்பட்டது. 35 ஒவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


ரோஹித் சர்மா (10), பந்த் (0), ஆகியோர் சொதப்ப விராட் கோலி 94 பந்துகளில் சதமும் பிறகு 99 பந்துகளில் 114 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 65 எடுக்க இருவரும் சேர்ந்து 92/3 என்ற நிலையிலிருந்து 16.2 ஓவர்களில் 120 ரன்களை விளாச வெற்றி எளிதானது கடைசியில் விராட் கோலி 2 பவுண்டரிகளை விளாசி வெற்றியைக் கொடுக்க இந்திய அணி 256/4 என்று வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன், தொடர்நாயகன் இரண்டும் விராட் கோலிதான்.

அதிர்ஷ்டக்கார விராட் கோலி; தொடக்கத்திலேயே கேட்சை விட்ட ஷேய் ஹோப்:

இந்தப் போட்டியில் வென்றால் தொடரை 1-1 என்று ட்ரா செய்ய வாய்ப்பிருந்தது மே.இ.தீவுகள் அணிக்கு, 35 ஓவர்களில் இலக்கு 255 ரன்களாக நிர்ணயிக்கப்பட்ட போது மே.இதீவுகளுக்கு இருக்கும் வாய்ப்பு ரோஹித்தையும் கோலியையும் வெளியேற்றினால் போதும் இந்திய அணி சைக்கிள் ஸ்டாண்டில் ஒரு சைக்கிளைத் தள்ளினால் வரிசையாக விழுமே அதுபோல் விழுந்து விட்டிருக்கும், இதில் ரோஹித்தை ரன் அவுட் செய்தனர். ஷிகர் தவண் பந்தை கட் செய்ய பாயிண்டில் டைவ் அடித்த பீல்டரால் தடுக்கப்பட்டது, ரோஹித் 1 ரன்னுக்காக தடதடவென ஓடி வந்தார்.. ஆனால் தவண் திருப்பி அனுப்ப ரீச் ஆக முடியாமல் ரன் அவுட் ஆனார்.

விராட் கோலி இறங்கி 11 ரன்களில் இருந்த போது கீமோ பால் பந்து ஒன்று கோலி மட்டையின் உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் ஹோப்பிட்டம் சென்றது ஆனால் இந்த வாய்ப்பை ஹோப் நழுவ விட்டார். இந்தக் கேட்சை பிடித்திருந்தால் இந்தியா 45/2 என்று ஆகி திக்கித் திணறியிருக்கும். ஆனால் கேட்ச் விடலாமா? அதன் பிறகு விராட் கோலி ஆடியது மாஸ்டர்ஃபுல் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்தது, இன்னொரு வாய்ப்பை அவர் வழங்கவேயில்லை.

ரோஹித் ஆட்டமிழந்த பிறகு ஷிகர் தவண் (36), ரிஷப் பந்த் (0) ஒரே ஓவரில் ஃபேபியோ ஆலன் பந்துகளில் காலியாகினர், மேலேறி வந்து தவண் கொடியேற்ற, ரிஷப் பந்த் முதல் பந்திலேயே பெரிய ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் போல் இறங்கி வந்து ஆடுகிறேன் பேர்வழி என்று மிட் ஆஃபில் கேட்ச் ஆகி வெளியேறினார். 92/3 என்ற நிலையில் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்தார். உண்மையில் ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டம் கோலியின் அழுத்தத்தை குறைத்தது என்றுதான் கூற வேண்டும். ஆலன் பந்தில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். அடுத்த ஓவரிலேயே ராஸ்டன் சேஸ் பந்தையும் சிக்சருக்குப் பறக்க விட்டார்.

இவர் அடிக்கத் தொடங்க இன்னொரு முனையில் விராட் கோலி, ஜேசன் ஹோல்டர் ஓவரையும் கீமோ பால் ஓவரையும் பதம் பார்த்து பவுண்டரிகள் விளாசினார். அதில் கீமோ பாலை அடித்த இரண்டு இன்சைட் அவுட் கவர் பவுண்டரிகள் அற்புதம். அய்யர் 33 பந்துகளில் அரைசதம் கண்டு 29வது ஓவரில் ரோச் பந்தை சிக்சருக்குத் தூக்க முயன்று லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். அவர் ஆட்டமிழக்கும் போது 41 பந்துகளில் 65 ரன்களை விளாசியதும் கோலியுடன் சேர்ந்து சதக்கூட்டணி அமைத்ததும் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தது.

அய்யர் ஆட்டமிழக்கும் போது 90 ரன்கள் பக்கம் வந்து விட்ட கோலி டீப் மிட்விக்கெட்டில் ஷாட் அடித்து தனது 43வது ஒருநாள் சதத்தை எட்டினார். இதே ஓவரில் 20,000 சர்வதேச ரன்களை 10 ஆண்டுகளில் எடுத்த முதல் வீரருமானார் விராட் கோலி. 94 பந்துகளில் கோலி சதம் எடுத்த போது இந்திய அணிக்கு 4 ஒவர்களில் 18 ரன்களே தேவைப்பட்டது. கெதார் ஜாதவ் 1 பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 நாட் அவுட், கோலி 99 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் நாட் அவுட். இந்திய அணி அபார வெற்றி.

கெய்ல், லூயிஸ் காட்டடிக்குப் பிறகு கட்டுப்பட்ட மே.இ.தீவுகள்:

கெய்ல், லூயிஸ் இந்தியப் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். முதல் 4 ஓவர்களில் 13/0 ஆனால் அடுத்த 6 ஓவர்களில் 101 ரன்கள். சிக்சர் மழை பொழிந்தது, ஷமியின் ஒரே ஓவரில் 20 ரன்களை விளாசினார் கெய்ல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமெட் யாரையும் விட்டு வைக்காமல் ஓய்வு ஒழிச்சலில்லாத அடி, விராட் கோலி ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சேட்டைகளும் அடங்கிப்போக திருதிருவென்று விழித்தார். கெய்ல் 41 பந்துகளில் 72, லூயிஸ் 29 பந்துகளில் 43 இருவரும் சேர்ந்து மொத்தம் 13 பவுண்டரிகள் 8 சிக்சர்களை 121 ரன்களில் விளாசினர். ஷமி லெந்தில் வீசிய பந்துகளெல்லாம் காட்டடிக்கு வித்திட்டது. கெய்லின் 54வது ஒருநாள் அரைசதம் ஆகும் இது.

பவர் ப்ளே முடிந்தவுடன் சாஹல் வந்தார், லூயிஸ் ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்கினார். அடுத்ததாக ஒரு பவுண்டரியுடன் கெய்லும் வெளியேறினார். மழையினால் புற களம் ஈரமாக இந்திய அணி சுலபமாக பவுண்டரிகள் விடாமல் வீச முடிந்தது. ஜாதவ் ஓவர் முடிந்தவுடன் மீண்டும் மழை வர ஆட்டம் 3 மணி நேரம் தடைபட்டது. 22 ஓவர்கள் முடிந்திருந்தன 158/2 என்ற நிலையிலிருந்து ஆட்டம் தொடங்கிய போது போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட மே.இ.தீவுகளுக்கு 13 ஓவர்கள்தான் மீதமிருந்தன. ஷிம்ரன் ஹெட்மையர், ஷேய் ஹோப் ரன்னை உயர்த்தும் நோக்கத்தில் தீவிரம் காட்ட ஆட்டமிழந்தனர். நிகோலஸ் பூரன் அதிரடி முறையில் 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். கலீல் அகமெட் வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்கப்பட்டது. மே.இ.தீவுகள் 35 ஓவர்களில் 240/7 என்று முடிந்தது..

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களைக் கைப்பற்றியது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உள்ளது.

விராட் கோலி 43வது ஒருநாள் சதம்கிரிக்கெட்இந்தியாமே.இ.தீவுகள்ஆட்ட நாயகன்தொடர்நாயகன் கோலிகெய்ல்லூயிஸ்சாஹல்

You May Like

More From This Category

More From this Author