

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் மே.இ.தீவுகள், இந்திய வேகப்பந்து வீச்சுக்கு சரியான பாடம் புகட்டியது.
முதல் 10 ஓவர்களில் 8 சிக்சர்கள் 12 பவுண்டரிகளுடன் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் விளாசியுள்ளது மே.இ.தீவுகள். கிறிஸ் கெய்ல் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமெட் ஆகியோரது பந்து வீச்சை கேட்டுக் கேட்டு அடித்தார், கோலி களவியூகம் செய்வதறியாது திருதிருவென்று விழித்து வருகிறார்.
கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் அரைசதம் விளாசி தற்போது 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 65 ரன்களுடனும், இவருக்கு சற்றும் சளைக்காது இந்தியபவுலர்களை கேட்டுக் கேட்டு அடிக்கும் எவின் லூயிஸ் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்து இந்தச் செய்தியை அடித்துக் கொண்டிருக்கும் போது சற்று முன் ஆட்டமிழந்தார். சாஹல் இவர் விக்கெட்டை வீழ்த்தினார்.
புவனேஷ்வர் குமார் 48 ரன்களை 5 ஓவர்களில் கொடுத்தா 5 பவுண்டரி 3 சிக்சர்கள். ஷமி 3 ஓவர்கள் 1 மெய்டன் 31 ரன்கள். 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். கலில் அகமெட் 2 ஒவர் 33 ரன்கள். 3 பவுண்டரி 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் 60 பந்துகளில் 27 பந்துகளை டாட் பால்களாக வீசினாலும் மீது 33 பந்துகளில் 114 ரன்கள் என்பது காட்டடியா அல்லது என்ன இது என்ற கேள்வி எழுகிறது.
முதல் 4 ஓவர்களில் 13/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 6 ஓவர்களில் சுமார் 101 ரன்களை விளாசித்தள்ளினர். கெய்ல் இப்படி ஆடினால் வீசுவதற்கு இந்திய வீச்சாளர்களிடம் லைனும் இல்லை லெந்தும் இல்லை, கேப்டன் விராட் கோலியின் சேஷ்டைகள் நீங்கலாக உத்திகள் எதுவும் இல்லை.
முதல் 10 ஓவர்களில் முதலில் பேட் செய்யும் போது 8 சிக்சர்கள் இதுவரை ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்டதில்லை.
மேலும் 2015 உலகக்கோப்பையில் நியூஸிலாந்து 8.2 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்த பிறகு முதல் 10 ஓவர்களில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர்.
கடைசியாக கெய்லும் தன் கடைசி இன்னிங்சில் 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கலீல் அகமட் பந்தில் அவுட் ஆகி மட்டை மேல் ஹெல்மெட்டைத் தாங்கிய படி வெளியேறினார்.