Published : 13 Aug 2019 06:35 PM
Last Updated : 13 Aug 2019 06:35 PM

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த ஜேம்ஸ் பேட்டின்சன் நீக்கம்: லார்ட்ஸ் டெஸ்ட் ஆஸி. அணி அறிவிப்பு

புதனன்று தொடங்கும் ஆஷஸ் தொடர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் அணியில் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய ஜேம்ச் பேட்டின்சன் இல்லை, இவருக்குப் பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் மிட்செல் ஸ்டார்க் ஒதுக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் பேட்டின்சன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குள் நுழைந்து எட்ஜ்பாஸ்டனில் சில முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் நீண்ட தொடர் என்பதாலும் லார்ட்சில் மழை வாய்ப்பு இருப்பதாலும் பவுலர்கள் காயமடைந்து விடக்கூடாது என்பதால் சுழற்சி முறையில் வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் முடிவெடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, ஜேம்ஸ் பேட்டின்சன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் குளிர்பான இடைவெளியின் போது பானங்களைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் டாஸ் போடும்வரை எதுவும் கூற இயலாது, கடைசி நேர மாற்றமும் இடம்பெறலாம் என்று ஆஸி. ஊடகம் தெரிவிக்கிறது.

தொடக்க வீரர் கேமரூன் பேங்கிராப்டுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பீட்டர் சிடில் கடந்த போட்டியில் சிக்கனமாக வீசியதோடு ஸ்டீவ் ஸ்மித்தின் அபார பேட்டிங்குக்கு உறுதுணையாக நின்று அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்ததால் அவரது இடம் பாதுகாப்பாக உள்ளது.

கேப்டன் டிம் பெய்ன் கூறும்போது, “ஆட்டம் தொடங்கும் முன்பாக பிட்சை இன்னொரு முறை அறுதியிடுவோம், வானிலை விவகாரமும் உள்ளது, ஆகவே சிறந்த அணிச்சேர்க்கை எது என்பதை அதன்படியே தீர்மானிப்போம். இது நீண்ட தொடர் நிறைய ஓவர்களை வீச வேண்டியுள்ளது. ஆகவே வேகப்பந்து வீச்சாளர்களை முறையாகப் பயன்படுத்தி ஓய்வு அளித்து பணிச்சுமையைக் குறைப்பதோடு, காயத்திலிருந்தும் காக்க வேண்டியுள்ளது” என்றார்

ஆஸ்திரேலிய அணி வருமாறு:

டேவிட் வார்னர், பேங்கிராப்ட், கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் (துணைக் கேப்டன்), மேத்யூ வேட், டிம் பெய்ன், பாட் கமின்ஸ், பீட்டர் சிடில், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x