Published : 12 Aug 2019 08:31 PM
Last Updated : 12 Aug 2019 08:31 PM

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை ஆஸ்திரேலியா‘க்ளீன் ஸ்வீப்’ செய்யும்- இயன் சாப்பல் உறுதி

முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயன் சாப்பல் இங்கிலாந்து அணியையும் அதைத் தேர்வு செய்த தேர்வுக்குழுவையும் வறுத்து எடுத்ததோடு இங்கிலாந்து இனி மீளவே வழியில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 122/8 என்ற நிலையிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் வெளுத்துக் கட்டி சதம் எடுத்ததோடு 2வது இன்னிங்சிலும் சதம் எடுத்தார், இவருடன் மேத்யூ வேடும் அதிரடி சதம் எடுக்க நேதன் லயன் 2வது இன்னிங்சில் விக்கெட்டுகளை அள்ள ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து சரியான உதை வாங்கியது.

அடுத்ததாக லார்ட்ஸில் டெஸ்ட் நடைபெறுகிறது, 2000த்திலிருந்து சுமார் 6 போட்டிகளில் லார்ட்ஸில் ஆஸ்திரேலியா 4-ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 18 ஆண்டுகளில் இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வீழ்த்தக் கூடிய வாய்ப்பை ஆஸ்திரேலியா ஒருபோதும் தவறவிடாது என்கிறார் இயன் சாப்பல்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி அவுட் ஆக்குவது என்பதே பெரிய தலைவலியாக இங்கிலாந்துக்கு ஆகியுள்ள நிலையில், அவர்கள் வேறு எதில் கவனம் செலுத்த முடியும்,திட்டமிட முடியும் என்று கேள்வி எழுப்பிய இயன் சாப்பல் மேலும் , ஸ்போர்ட்ஸ் சண்டே ஊடகத்துக்கு அளித்த வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:

“இங்கு நான் 5-0 என்ற கிளீன் ஸ்வீப்பை எதிர்பார்க்கிறேன், இந்தத் தொடர் தொடங்கும் முன்பே நான் கூறினேன் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தோல்வி கண்டால் விரைவில் உடைந்து நொறுங்கி விடுவார்கள் என்று.

இங்கும் இங்கிலாந்து இப்படி உடைந்து நொறுங்கியதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோ, ஓரிருமுறை இப்படி நடந்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். வானிலை இடையூறு செய்யவில்லை எனில் இந்தத் தொடரிலும் இங்கிலாந்து உடைந்து நொறுங்குவதைப் பார்க்க முடியும்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் 4 ஒருநாள் வீரர்கள் உள்ளனர். ஆனாலும் ஒருநாள் ஆடி ஆட்டத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

ஸ்டீவ் ஸ்மித்திற்கு அவர்களால் சரியான லெந்தில் வீச முடியவில்லை, பிராட் ஒரேயொரு ஒவரை 6 பந்துகளும் சரியான இடத்தில் வீசினார், ஆனால் அவரால் அதை மீண்டும் செய்ய முடியவில்லை. ஒன்று இங்கிலாந்தினால் முடியவே முடியாது அல்லது செய்ததை அப்படியே நீட்டிக்கும் பொறுமை இருக்காது. இதுதான் அவர்களது பெரிய பிரச்சினை.

2வது டெஸ்ட் போட்டியில் சமரசத்துக்கு இடமின்றி இங்கிலாந்து அணித்தேர்வைச் செய்ய வேண்டும். ஆஃப் ஸ்பின்னர் லீச், மொயின் அலியை விட சிறந்தவர் என்று நான் கருதவில்லை. நான் இங்கிலாந்து தேர்வில் இருந்தால் ஸ்பின்னரே தேவையில்லை என்று முடிவெடுத்து சாம் கரன், ஜோப்ரா ஆர்ச்சரைத்தான் லெவனில் தேர்வு செய்வேன்” இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x