Published : 12 Aug 2019 06:55 PM
Last Updated : 12 Aug 2019 06:55 PM

‘உ.கோப்பை அணியில் இடம் பெற முடியாத அளவுக்கு ஷ்ரேயஸ் அய்யர் தவறு எதுவும் செய்யவில்லையே’: கவாஸ்கர் பேட்டி

மே.இ.தீவுகளுக்கு எதிரான போர்ட் ஆஃப் ஸ்பெயின் போட்டியில் 5ம் நிலையில் இறங்கி அதிரடி 71 ரன்களைக் குவித்த ஷ்ரேயஸ் அய்யர் 4ம் இடத்தில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்கிறார் சுனில் கவாஸ்கர்.

இது தொடர்பாக அவர் சோனி டென் சானலில் கூறியதாவது:

என் பார்வையில் ரிஷப் பந்த், தோனி போல் 5-6ம் இடங்களுக்கு பொருத்தமானவர். அதாவது பினிஷராக அங்குதான் இவர் போன்ற அதிரடி வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஒருநாள் போட்டிகளில் 40-45 ஒவர்கள் வரை விராட் கோலி, தவண், ரோஹித் கூட்டணி ஆடிவிட்டது என்றால் ரிஷப் பந்த் 4ம் நிலையில் இறக்கப்படுவது சரியாகும். ஆனால் 30-35 ஓவர்கள் ஆட வேண்டிய நிலை ஏற்படும் போது ஷ்ரேயஸ் அய்யர் 4ம் நிலையிலும் பந்த் 5ம் நிலையிலும் களமிறக்கப்பட வேண்டும்.

நேற்றைய போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தனக்கு வழங்கிய வாய்ப்பை இருகரங்களிலும் இறுக்கப் பற்றியுள்ளார். 5ம் நிலையில் இறங்கினார், போதுமான ஓவர்கள் கைவசம் இருந்தன. அதுவும் கேப்டனுடன் ஆடுவது ஒரு அதிர்ஷ்டமே, ஏனெனில் கோலி இவர் மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார்.

கிரிக்கெட்டை கற்றுக் கொள்ள சிறந்த இடம் ரன்னர் முனைதான். ஷ்ரேயஸ் அய்யர் இதைத்தான் செய்தார், விராட் கோலியிடமிருந்து கற்றுக் கொண்டார். இந்திய அணியில் அவரது இந்த இன்னிங்ஸ் அவருக்கு 4ம் நிலை என்ற நிரந்தர இடத்தைப் பெற்றுத்தரவில்லை எனில் வேறு என்ன பெற்றுத்தரும் என்று தெரியவில்லை.

இந்தப் போட்டிக்கு முன்பாக அவர் ஆடிய 5 போட்டிகளில் 2 ஐம்பதுகளை அடித்தார் அதிகபட்ச ஸ்கோரான 88 ரன்களையும் எட்டினார். உலகக்கோப்பை அணியில் இவரைத் தேர்வு செய்ய முடியாத அளவுக்கு அவர் தவறு எதுவும் இழைத்து விடவில்லை, ஆனால் இது கடந்த காலம்.

இப்போது கொடுத்த வாய்ப்பில் 71 எடுத்துள்ளார், ஆகவே அவருக்கு நீண்ட கால வாய்ப்பை வழங்குவதுதான் நல்லது.

இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x