

ஆகஸ்ட் 12, இதே நாளில் 2011-ல் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு சேவாக் தன்னைத் தானே கிண்டல் செய்து கொண்டுள்ளது சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பேசு பொருளாகியுள்ளது.
அதாவது பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்ததாக அறியப்படும் ஆர்யபட்டாவுக்கு வேடிக்கையாக தான் அர்ப்பணிப்புச் செய்ததாக சுய-எள்ளல் பாணிக்குச் சென்று விட்டார் சேவாக்.
2011 இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு பெரும் கேடாக அமைந்தது, 4-0 என்று உதை வாங்கித் திரும்பியது, இங்கிலாந்து நம்மை புரட்டி எடுத்தனர். இந்தத் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத சேவாக் 3வது மேட்சில் ஆட பர்மிங்ஹாம் வந்தார். ஆனால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
முதல் இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராடும், 2வது இன்னிங்சில் ஆண்டர்சனும் சேவாகை ‘டக்’ அவுட் செய்தனர்.
இந்த டெஸ்ட்டில் இந்திய அணி 224 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் மடிந்தது, இங்கிலாந்து அணி இந்திய அணி வீரர்களை மைதானம் நெடுக அலைக்கழித்து 710/7 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது அலிஸ்டர் குக் 294 ரன்கள் விளாசினார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 244 ரன்களுக்கு மடிந்தது இங்கிலாந்து மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இது தொடர்பாக ட்வீட் செய்த சேவாக், “இதே நாள்.. 8 ஆண்டுகளுக்கு முன்பாக பரிங்ஹாமில் இரு இன்னிங்ஸ்களிலும் நான் பூஜ்ஜியம். இங்கிலாந்துக்கு வர 2 நாட்கள் பயணம் மற்றும் 188 ஓவர்கள் பீல்ட் செய்தோம். இதனால் விருப்பமற்று ஆர்யபட்டாவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று (பூஜ்ஜியம்)” என்று தன்னைத்தானே கிண்டல் செய்து கொண்டுள்ளார்.
சேவாக் 2015-ல் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
-ஐஏஎன்எஸ்.