

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை 59 ரன்கள் வித்தியாசத்தில் (டக்வொர்த் முறை) வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.
விராட் கோலி பல சாதனைகளை முறியடித்த அபார இன்னிங்சை ஆடி சதம் எடுக்க ஷ்ரேயஸ் அய்யர் 4ம் நிலையில் இறக்கப்படாமல் ரிஷப் பந்த்தை இறக்கி மூக்குடைப் பட்டார் விராட் கோலி, பந்த் 35 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து பிராத்வெய்ட் பந்தில் பவுல்டு ஆனார். அதுவும் கடைசி 14 பந்துகளில் 12 டாட்பால்கள் என்று அவர் சொதப்பி கடைசியில் அக்ராஸ் த லைனில் ஆடி ஸ்டம்பை இழந்தார்.
அதன் பிறகு 5-ம் நிலையில் ஷ்ரேயஸ் இறங்கி கோலியுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து சுமார்19 ஓவர்களில் 125 ரன்களைச் சேர்த்தனர். இதில் அய்யர் மட்டும் 68 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தார்.
இந்த இன்னிங்ஸைத்தான் விராட் கோலி ஆட்டம் முடிந்த பிறகு விதந்தோதினார்.
“பேட்டிங் நல்ல முறையில் அமைந்தது. முதலில் ஏன் பேட் செய்ய விரும்பினோம் என்பதற்குப் பதில் மே.இ.தீவுகள் 2வதாக பேட் செய்த போதே நீங்கள் பார்த்திருப்பீர்கள். நடுவில் மழை அவர்களுக்குக் கொஞ்சம் உதவியது. இல்லையெனில் பேட்டிங் இன்னும் கடினம்தான்.
மிடில் ஓவர்களில் நிறைய டாட்பால்களை வீசுவது அவசியம். ஒவ்வொரு முறை அவுட் பீல்டுக்கு பந்து செல்லும் போதெல்லாம் பந்து ஈரமாகவே செய்தது. பந்தை பிடிக்க முடியவில்லை, வழுக்கியது, இது சாமர்த்தியம் தேவைப்படும் சூழ்நிலை என்பதை அறிந்தோம் எனவே விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டால் கடினம் என்றே கருதினோம்.
எதிரணியில் இடது கை வீரர்கள் இருப்பதால் குல்தீப்பைச் சேர்த்தோம். சைனமன் பவுலர் தேவை என்று நினைத்தோம், சாதாரண லெக் ஸ்பின்னரை விட இடது கை சைனமன் பவுலர் நன்றாக வீச முடியும் என்று கருதினோம். ஜடேஜா இருப்பது பேட்டிங்கிலும் வலு சேர்க்கிறது.
ஷ்ரேயஸ் அய்யர் நம்பிக்கை மிகுந்த ஆட்டக்காரர். அவரிடம் சரியான அணுகுமுறை உள்ளது. அவர் கைகள் அபாரம். அவரால் எனக்கு சுலபமானது.” என்றார் ஆட்ட நாயகன் விராட் கோலி.