Published : 12 Aug 2019 01:02 PM
Last Updated : 12 Aug 2019 01:02 PM

சர்ச்சை அவுட்களுக்கு தீர்வு: வருகிறது 'ஸ்மார்ட் கிரிக்கெட் பால்' 

வெலிங்டன்,

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்கெனவே பல்வேறு தொழில்நுட்பங்கள் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் அடுத்தக்கட்டமாக சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அறிமுகமாக உள்ளன.

இந்த சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா நிறுவனம் இந்த சிப் பொருத்தப்பட்ட பந்துகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அது என்ன ஸ்மார்ட் பந்து, சிப் பொருத்தப்பட்ட பந்து என்று கேட்கிறீர்களா?

  • கிரிக்கெட் பந்துகளில் மிகவும் சிறிய அளவிலான கீழே விழுந்துவிடாத அளவில், அதிர்வுகளைத் தாங்கக்கூடிய சிப்புகள் பந்தில் பொருத்தப்படும்.
  • இந்தப் பந்து வீசப்படும் போது பந்தின் வேகம், பந்துவீச்சாளர் கையை விட்டு பந்து ரிலீஸாகும் போது அதன் வேகம், தரையில் பட்டு பவுன் ஆகும்போது அதன் வேகம், பவுன்ஸருக்குப் பின் பேட்ஸ்மேனைக் நோக்கிச் செல்லும்போது வேகம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிய முடியும்.
  • சுழற்பந்துவீச்சாளர் பந்துவீசும்போது பந்து எந்தப் பக்கம் சுழலும், எந்தப் பக்கம் செல்லும் என்பதை பந்து காற்றில் சுழன்று செல்லும்போதே கண்டுபிடிக்க இயலும்.
  • டிஆர்எஸ் முறை இருந்தாலுமே அதிலிருந்து கிடைக்கும் அவுட் முடிவுகள் மிகத்துல்லியமாக இருப்பதில்லை என்ற குற்றசாட்டு இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட் பால் வந்துவிட்டால், உண்மையில் பந்து ஸ்டெம்பில் பட்டதா, அல்லது உரசிச் சென்றதா, பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டு பேட்டில் பட்டதா அல்லது நேரடியாக பேட்டில் பட்டு கால்காப்பில் பட்டதா என்பதை மிகத்துல்லியமாக அறிய முடியும்.
  • மேலும் ஒருவீரர் கேட்ச் பிடித்ததில் சர்ச்சை எழுந்தால்கூட பந்து எந்த நேரத்தில் கேட்ச் பிடிக்கப்பட்டது, தரையில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே பிடிக்கப்பட்டதா என்பதையும் அறியலாம். இதன் மூலம் சர்ச்சைக்குரிய அவுட்களுக்குத் தீர்வு காண முடியும்.
  • இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிக்குள் வரும்போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார்.
  • இந்த ஸ்மார்ட் பந்துகள் முதல்கட்டமாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி20 போட்டியில் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x