Last Updated : 12 Aug, 2019 10:53 AM

 

Published : 12 Aug 2019 10:53 AM
Last Updated : 12 Aug 2019 10:53 AM

இந்திய அணி அபாரம்; கெயிலின் சாதனையை சதத்தால் மங்கச் செய்த கோலி: திருப்புமுனையான புவனேஷ்வரின் இரு விக்கெட்

போர்ட் ஆப் ஸ்பெயின்,

விராட் கோலியின் அபாரமான சதம், புவனேஷ்வர் குமாரின் திருப்புமுனையான விக்கெட்டுகள் ஆகியவற்றால் போர்ட ஆப் ஸ்பெயின் நேற்று நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. 280 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. ஆனால், மழை குறுக்கிடவே டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடி அதிகமான ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்ற முதல் மே.இ.தீவுகள் வீரர் எனும் பெருமையைப் படைத்து, லாராவின் (299) சாதனையை முறியடித்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த மே.இ.தீவுகள் வீரர் எனும் சாதனையை முன்னாள் வீரர் பிரையன் லாரா (10,378) வைத்திருந்தார். அந்த சாதனையையும் நேற்று கெயில் முறியடித்து 10 ஆயிரத்து 353 ரன்கள் சேர்த்தார்.

ஆனால், கெயிலின் அனைத்து சாதனைகளும் மட்டுப்படும் அளவுக்கு விராட் கோலியின் சதம் நேற்று அமைந்திருந்தது. ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 42-வது சதத்தையும், அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்களில் கங்குலியின் சாதனையையும் முறியடித்து முத்திரை படைத்தார் கோலி. ஆட்டநாயகன் விருதையும் கோலி வென்றார்.

அது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் வலுவாக இருந்த மே.இ.தீவுகள் அணி 71 பந்துகளில் 91 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடியது. அப்போது 35-வது ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் திருப்புமுனையை ஏற்படுத்தினார். குறிப்பாக ரஸ்டன் சேஸ்க்கு புவனேஷ்வர் குமார் பிடித்த கேட்ச் அற்புதம்.

நடுவரிசையில் பலமில்லாமல் திண்டாடிய இந்திய அணிக்கு புதிய வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் அடையாளமாகியுள்ளார். தொடக்க வீரர்கள் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோர் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழக்க கோலியுடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் ஆடியது முதிர்ச்சி.

இருவரும் சேர்ந்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவாகக் கட்டமைத்தனர். விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் பெரும்பாலானோர் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் ஒழுக்கம் குறைந்தே காணப்பட்டது.

உதிரிகள் கணக்கில் இந்திய அணி 21 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். ஆனால் மே.இ.தீவுகள் அணியினரோ 12 ரன்கள் மட்டுமே கொடுத்ததை என்னவென்று சொல்வது.

புவனேஷ்வர் குமார் 8 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 8 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 7 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். ரவிந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 15 ரன்களுடன் ஒரு விக்கெட்டைச் சாய்த்தார்.

சிறப்பாகப் பந்துவீசி வரும் ரவிந்திர ஜடேஜாவுக்கு தொடர்ந்து ஏன் 10 ஓவர்கள் கொடுக்கப்படுவதில்லை எனத் தெரியவில்லை. அரைவெட்டு பந்துவீச்சாளர் கேதார் ஜாதவுக்கு வாய்ப்பு அளிப்பதைக் குறைத்துவிட்டு ஜடேஜாவுக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கலாம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் போராட்ட குணம் நேற்றைய ஆட்டத்தில் தென்படவில்லை.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் நேற்று சொற்பமாக ஆட்டமிழந்தார், நடுவரிசை பேட்ஸ்மேன்களும் ஏமாற்றினார்கள். அணியில் அதிகபட்சமாக லூயிஸ் சேர்த்த 65 ரன்களும், பூரண் சேர்த்த 42 ரன்கள் மட்டும்தான். மற்ற வீரர்கள் அனைவரும் 20 ரன்களுக்கு உள்ளாகவே தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் 149 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்த 62 ரன்களுக்குள் மீதமிருந்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது.

தவண் தடுமாற்றம்
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

காட்ரெல் பந்துவீச்சுக்கு தொடர்ந்து திணறிவரும் தவண் இந்த முறையும் அவரின் பந்துவீச்சுக்கு இரையாகினார். கால்களை நகர்த்தி வைத்து ஆடாமல் கால்காப்பில் வாங்கி முதல் ஓவரிலேயே எல்பிடபிள்யு முறையில் தவண் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் மந்தம்

அடுத்து கேப்டன் கோலி களம் புகுந்து ரோஹித்துடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். கோலி வந்தவுடனே 2-வது பந்தில் பவுண்டரி அடித்து தனது அதிரடியைக் காட்டினார். ஆனால் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் மந்தமான போக்கு தென்பட்டது. ஒருவேளை கோலியுடன் சேர்ந்ததால், ரோஹித் அவ்வாறு ஆடினாரா எனத் தெரியவில்லை!

அணியின் ஸ்கோர் 76 ரன்கள் இருந்தபோது, ரோஹித் சர்மா 18 ரன்களில் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 74 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கோலி 57 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

கவலையளிக்கும் பந்த்

அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கினார். 4-வது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பந்து மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பொறுமையாக களத்தில் நிற்கப் பழகாத பந்த், 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 20 ரன்கள் சேர்த்து பிராத்வெய்ட் பந்துவீச்சில் போல்டாகினார். 101 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியது.

ஸ்ரேயாஸ் பொறுப்பு

4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி, கோலியுடன் இணைந்தார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அதன்பின் நங்கூரமிட்டு கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதத்தை நோக்கி முன்னேறிய கோலி 112 பந்துகளில் தனது 42-வது சதத்தை நிறைவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 49 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

பிராத்வெயட் வீசிய 42-வது ஓவரில் விராட் கோலி 120 ரன்கள் சேர்த்த நிலையில் ரோச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி கணக்கில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். இருவரும் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தனர். 45 ஓவர்களில் மழை பெய்ய ஆட்டம் 25 நிமிடங்கள் தடைபட்டது.

அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களிலும், அடுத்துவந்த ஜாதவ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். புவனேஷ்குமார் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஜடேஜா 16 ரன்னிலும், ஷமி 3 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்தது. மே.இ.தீவுகள் தரப்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கெயில் திணறல்

280 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. லூயிஸ்,கெயில் களமிறங்கினர். கெயில் தடுமாற்றத்துடன் பேட் செய்ய, லூயிஸ் வழக்கமான அதிரடியைத் தொடர்ந்தார்.

தொடக்கத்தில் இருந்தே திணறிய கெயில் 11 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்துவந்த ஷாய் ஹோப் 5 ரன்களில் கலீல் அகமது பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

13-வது ஓவரில் மழை தொடரவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஓவர்கள்குறைக்கப்பட்டு இலக்கும் மாற்றப்பட்டது. 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. லூயிஸ், ஹெட்மயர் ஜோடி சிறிது நேரம் மட்டுமே களத்தில் இருந்தனர்.ஹெட்மயல் 18 ரன்னில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

லூயிஸ் அரை சதம்

4-வது விக்கெட்டுக்கு லூயிஸ், பூரண் ஜோடி மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். இருவரையும் பிரிக்க குல்தீப் யாதவ், ஜடேஜா, ஜாதவ் பந்துவீசியும் நிதானமாக பேட் செய்து ஸ்கோரை உயர்த்தனர். லூயிஸ் அரை சதம் அடிக்க, பூரணும் அரைசதத்தை நெருங்கினார்.

குல்தீப் வீசிய 28-வது ஓவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து லூயிஸ் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர்.

திருப்புமுனை

அடுத்துவந்த சேஸ், பூரணுடன் சேர்ந்தார். புவனேஷ்வர் குமார் வீசிய 35-வது ஓவரில் திருப்பம் நிகழ்ந்தது. 3-வது பந்தில் பூரண் 42 ரன்னில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதேஓவரின் 5-வது பந்தில் சேஸ் 18 ரன்னில் புவனேஷ்வர் குமாரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் மே.இ.தீவுகள் தடுமாறியது.

அதன்பின் மே.இதீவுகள் அணியின் பின்வரிசை வீரர்கள் வருவதும் போவதும் என இருந்தனர். கடைசி வரிசையில் பிராத் வெய்ட், ரோச், தாமஸ் ஆகியோர் டக் அவுட் ஆகினர். காட்ரெல் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹோல்டர் 13 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

42 ஓவர்களில் மே.இதீவுகள் அணி 210 ரன்களில் ஆட்டமிழந்து 59 ரன்னில் தோல்வி அடைந்தது. இந்திய அணித் தரப்பில் புவனேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், ஷமி, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.


போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x