

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை இனிமேல் எந்த இடத்தில் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஊக்கமருந்து சோதனையை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு(என்ஏடிஏ) நடத்தும் என்று விளையாட்டுத்துறை செயலாளர் ராதேஷ்யாம் ஜூலன்னியா தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(பிசிசிஐ) இனிமேல் வேறு வழியில்லை நாடா எனப்படும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் தேசிய விளையாட்டுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ, நாடா மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே இன்று நடந்தகூட்டத்தில் நாடாவுக்கு கட்டுப்படுவதாக பிசிசிஐ சம்மதம் தெரிவித்தது.
இப்போதுவரைக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச ஊக்கமருந்து சோதனை மேலாண்மை நிறுவனம்தான் கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து சிறுநீர், ரத்த மாதிரிகளை சேகரித்து, தேசிய ஊக்கமருந்து சோதனை கூடத்துக்கு அனுப்பி வந்தது. இனிமேல் சர்வதேச நிறுவனம் தலையிடாது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனமே அந்தபணியைச் செய்யும்.
பிசிசிஐ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் விளையாட்டுத்துறை செயலாளர் ஜூலனியா கூறியதாவது:
ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச ஊக்கமருந்து சோதனை மேலாண்மை நிறுவனம் என்பது பிசிசிஐ நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு வீரர்களிடம் இருந்து மாதிரிகளை எடுத்து வந்தது. இனிமேல் அந்தபரிசோதனைகள் அனைத்தும் நாடா பரிசோதனை செய்யும். நான் பிசிசிஐ அதிகாரிகளிடம் தெளிவாகக் கூறிவிட்டேன், இனிமேல், சுயமாக இந்த விஷயத்தில் முடிவு எடுக்க முடியாது, சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். சட்டம் அனைத்து அமைப்புகளுக்கும் ஒரமாதிரியானதுதான்.
ஒவ்வொரு விளையாட்டு அமைப்புக்கும் இந்த சட்டம் ஒரேமாதிரியாத்தான் இருக்கும். நீங்கள் இதில் ஒப்பந்தம் செய்யத் தேவையில்லை. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த சட்டம் ஒவ்வொரு விளையாட்டுப்பிரிவுக்கும் பொருந்தும்.
இனிமேல், இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இனிமேல் நாடா ஊக்கமருந்து சோதனை செய்யும். அதற்கான அதிகாரத்தை உலக ஊக்கமருந்து சோதனை அமைப்பு வழங்கியுள்ளது.
இந்திய சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எங்களின் முதல் கவலை தரமான ஊக்கமருந்து சோதனை பொருட்கள் இருப்பதுதான். ஆனால், சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையம் பரிந்துரைத்த கருவிகளைத்தான் பயன்படுத்தப்படுகிறோம்.
வீரர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் ஊழியர்கள் நன்கு பயிற்சி எடுத்த, தேர்ந்த அதிகாரிகள். ஒருவேளை அவர்களைக்காட்டிலும் அதிகமா தகுதியில் ஊழியர்கள் தேவை என்றாலும், அதற்கான ஊதியத்தில் உரிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும், வாடாவின் விதிமுறைப்படி அனைத்து ஊக்கமருந்து சோதனைகளும் விரைவாக ஆய்வு செய்யப்பட்டு, 90 நாட்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் இந்த விஷயங்கள் அனைத்தையும் பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது, அவர்கள் கூறிய விஷயங்களும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்துவதுதான் பணி. எந்த வீரருக்கும், விளையாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல இவ்வாறு விளையாட்டுத்துறை செயலாளர் தெரிவித்தார்.
பிடிஐ