Published : 09 Aug 2019 05:16 PM
Last Updated : 09 Aug 2019 05:16 PM

மைதானத்துக்குள் வருவதும் போவதுமான  கிரிக்கெட் போட்டிகள் ஆபத்தானவை: கடும் வெறுப்பில் கேப்டன் விராட் கோலி

நேற்று கயானாவில் ரத்து செய்யப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் வீரர்களுக்குப் பதிலாக மழை விளையாடியது. வீரர்கள் மழை நின்றால் களமிறங்குவதும் கொஞ்சம் விளையாடுவதும் பிறகு மழை பெய்தால் உடனே செல்வதும், இப்படியாக வருவதும் போவதுமாக இருந்தனர். கடைசியில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இதுமாதிரி போட்டிகளினால் வீரர்கள் காயம்தான் அடைவார்களே தவிர மற்றொரு பயனுமில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

13 ஓவர்களில் 54/1 என்ற நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

விராட் கோலி இது பற்றி கூறும்போது, “கிரிக்கெட்டில் மிக மோசமான விஷயம் மழையினால் இறங்குவதும் பிறகு போவதுமாக இருக்கும் ஆட்டங்களே. அடிக்கடி ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கும் போது களம் வழுக்கும் நிலையில் வீரர்களுக்கு காயம்தான் ஏற்படும். சில பிட்ச்கள் உண்மையில் உங்களை சோதிக்கும்.

பிட்ச்களைப் பொறுத்தவரை கரீபியனில் சிலது நல்ல வேகம் பவுன்ஸ் இருக்கும், சில பிட்ச்கள் மந்தமாக இருக்கும். ஆகவே அதனை ஆடித்தான் கணிக்க முடியும். ஆகவே மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களில் களமிறங்குவதும் பிறகு திரும்பிப் போவதுமான நிலை இருப்பது சரியானதல்ல.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

மழை பெய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு விடுகின்றனர், ஆனால் ஏகப்பட்ட தொகையினை வாரியங்கள் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பிடுங்குகின்றன, ஆகவே அவர்களும் விளம்பரங்களை நம்பி போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்கின்றனர், ஆனால் போட்டிகள் ரத்தாகும் போது குறைந்தது 4-5 மணி நேரம் சென்றுதான் அறிவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை நடுவர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் உள்ளதே இத்தகைய போட்டிகளில் வீரர்கள் பலிகடாவாக்கப்படுவதற்குக் காரணம்.

வர்த்தகக் காரணங்களாலேயே மைதானம் ஈரமாக வீரர்களுக்கு ஆபத்தாக இருக்கும் போதும் களமிறங்க நேரிடுகிறது, காரணம் ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனங்கள், ஸ்பான்சர்களை திருப்தி செய்ய வேண்டியுள்ளது, ஆட்டம் நடைபெற வாய்ப்பேயில்லை என்றாலும் வேண்டுமென்றே ஒரு ஹோப் கொடுத்து இழுத்தடித்தே ஆட்டத்தை கைவிடும் அறிவிப்பை வெளியிடுகின்றனர்.

விராட் கோலி இதைத்தான் மறைமுகமாக சுட்டுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x