Published : 08 Aug 2019 05:47 PM
Last Updated : 08 Aug 2019 05:47 PM

வரிவிலக்கு தொடர்பாக பிசிசிஐ-ஐசிசி இடையே மோதல்; உ.கோப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம்: பிசிசிஐ அதிகாரி

ஐசிசி ஆண்டு வருவாயில் இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு பகிரப்படும் தொகை பெரிய அளவாக இருப்பதால் அதைக் குறைக்க ஐசிசி முடிவெடுக்கப் போவதாக அச்சுறுத்தியதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் பிரிட்டன் சட்ட நிறுவனம் ஒன்றை உதவிக்கு நாடியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உலக கிரிக்கெட் நிகழ்வுகள் அனைத்திற்கும் முழு வரிவிலக்கு கோருகிறது, 2016 உலக டி20 போட்டிகளுக்கான வரிச்சலுகையையும் ஐசிசி எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

இந்நிலையில், ஜூலை 6ம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐ-யின் சிஓஏ கூட்டத்தில் 2016 டி20 உலகத் தொடரினால் ஐசிசிக்கு ஏற்பட்டுள்ள வரிச்சுமையை ஐசிசி ஆண்டு வருவாயில் இந்தியாவின் பங்கைக் குறைப்பதன் மூலம் ஈடுகட்டவுள்ளதாக தெரிவித்தது. அதாவது பிசிசிஐ-யின் ஆண்டு வருவாய்ப் பகிர்மானத்தின் ஒருபகுதியை பிடித்தம் செய்ய ஐசிசி முடிவெடுத்துள்ளது.

பிசிசிஐ-யின் சட்டக்குழு சிஓஏவிடம் வரிவிலக்குகளுக்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால் ஐசிசி பொறுமைக் காக்கத் தயாராக இல்லாததால் பிசிசிஐ-க்கான ஐசிசி-யின் வருவாய்ப் பகிர்விலிருந்து இந்தத் தொகையை கழித்து வரிச்சலுகைத்தொகையை மீட்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

2016 உலக டி20 தொடர் ஐசிசி ஊடக உரிமைகள் ஒப்பந்தங்களின் படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐசிசிக்கு அளிக்க வேண்டிய தொகையில் 10% தொகையை நிறுத்தி வைக்க வரி ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஐசிசி தற்போது இந்தத் தொகையைத்தான் பிசிசிஐக்கு பகிரப்படும் ஆண்டு வருவாய் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து பிரிட்டன் சட்ட நிறுவனத்தின் ஆலோசனையை நாட சிஓஏ பிசிசிஐ சட்ட குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசியிலிருந்து வரும் 405 மில்லியன் டாலர்கள் தொகையிலிருந்து 10% தொகையான 40.5 மில்லியன் தொகையை ஐசிசி பிடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசின் சட்ட விதிமுறைகளை பிசிசிஐ ஒன்றும் செய்ய முடியாது என்று பலமுறை ஐசிசிக்கு அறிவுறுத்தி விட்டோம் என்கிறார் இந்த பிசிசிஐ அதிகாரி.

இந்நிலையில் நடப்பு வரி முறை மாற்றப்படாவிட்டால் இந்தியாவில் ஐசிசி தொடர்களான 2021 உலக டி20 மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர்களை நடத்துவது சிக்கலாகும் என்கிறார் பிசிசிஐ அதிகாரி.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x